19 ஆண்டுகளுக்கு முன்பு, 2002 ஜூலை 13-ம் தேதி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி, நாட்வெஸ்ட் தொடரில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.


இங்கிலாந்து எதிரான இந்த போட்டியில், இந்திய அணி வீரர்கள் கைஃப் மற்றும் ஜாகிர் கான் வெற்றி பெறுவதற்கான கடைசி ரன்னை எடுத்தவுடன், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்று கொண்டிருந்த இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தன்னுடைய ப்ளூ ஜெர்ஸியை கழற்றி வெற்றியை கொண்டாடினார்.






இந்த சம்பவம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத நிகழ்வாக பதிவானது. இந்த சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் நிறைவானபோது, ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் இந்த சம்பவத்தை மீண்டும் நினைவுகூர்ந்து பேசி வருவது வழக்கமாகிவிட்டது.


இந்த சம்வத்தை பற்றி முன்னாள் இந்திய வீரர்களும், மைனாத்தில் இருந்த மற்றவர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து இருந்தாலும், சமீபத்தில் ராகுல் டிராவிட் பகிர்ந்த தகவல் சுவாரஸ்யமானது.






இது குறித்து டிராவிட் பேசியபோது, “தாதா என்ன செய்கிறார் என நான் ஷாக் ஆகிட்டேன்.  என் அருகே இருந்த பாஜி (ஹர்பஜன்), தானும் ஷர்ட்டை கழட்ட இருப்பதாக சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால், நான் அவரது சட்டையை கழட்டவிடாமல் பிடித்து இழுத்து கொண்டிருந்தேன்.” என தெரிவித்துள்ளார்.


இந்த போட்டியில், 326 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக் மற்றும் கங்குலி சிறப்பான துவக்கத்தை அளித்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 106 ரன்கள் சேர்த்தனர். முதல் 14 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. எனினும் கங்குலி 60 ரன்களுடனும், சேவாக் 45 ரன்களுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் பின் களமிறங்கி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது கைஃப் 75 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்திய அணி வெற்றி பெற்ற தருணத்தில்தான், மறக்க முடியாத இந்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது!