கோவை அருகே உயிரிழந்த பெண் காட்டு யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி ஆனைக்கட்டி. அப்பகுதி அருகே உள்ள சேம்புக்கரை வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்து இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதிக்கு வனப் பணியாளர்கள் சென்று பார்த்த போது, பெண் யானை உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வனத் துறையினர் ஆய்வு செய்த போது ஆந்த்ராக்ஸ் நோய் அறிகுறி இருப்பதுன், யானையின் ஆசன வாய் மற்றும் வாயிலிருந்து இரத்தம் வெளியேறி இருப்பது தெரியவந்தது. மேலும் உயிரிழந்த காட்டு யானையின் வயது 12 முதல் 14 க்குள் இருக்கும் எனவும், இந்த பெண் யானை கூட்டத்தில் இருந்து தனியாக நகர்ந்து வந்து நோய் வாய்ப்பட்டிருக்கலாம் எனவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்களால் உயிரிழந்த யானைக்கு உடற்கூராய்வு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து அறிய, யானையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டது.
இந்த பரிசோதனையில் உயிரிழந்த பெண் காட்டு யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆந்த்ராக்ஸ் நோய் என்பது விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக் கூடிய ஒரு தொற்று நோய் ஆகும். நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிகளவில் கால்நடைகளுக்கும், விலங்குகளுக்கும் தான் இந்நோய் பாதிப்புகள் ஏற்படும். ஆந்த்ராக்ஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதை அடுத்து, ஆனைக்கட்டி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த கால்நடை துறையினருக்கு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மற்ற விலங்குகள் அல்லது கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு அறிகுறி இருக்கிறதா என்பது குறித்து வனத் துறை மற்றும் கால்நடை துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் கோவை வனக் கோட்டத்தில் 4 யானைகள் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. கடந்த 2011 ம் ஆண்டில் மேட்டுப்பாளையம் வனச் சரகத்தில் 23 வயது பெண் யானையும், 2014 ம் ஆண்டில் பெரிய நாய்க்கன்பாளையம் வனச் சரகத்தில் 4 வயது ஆண் யானையும் உயிரிழந்துள்ளன. இதேபோல 2016 ம் ஆண்டில் சிறுமுகை வனச் சரகத்தில் 15 முதல் 20 வயதிற்கு உட்பட்ட பெண் யானையும், அதே ஆண்டில் மதுக்கரை வனச் சரகத்தில் 15 வயது ஆண் யானையும் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளன.