இந்த வாரம் கடந்த திங்கட்கிழமை தனது 100-வது விம்பிள்டன் போட்டியை முடித்த கையோடு, நோவக் ஜோகோவிச் செவ்வாயன்று தனது 400-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ஆண்ட்ரே ருப்லெவ்வுக்கு எதிராக ஆடினார். இந்த காலிறுதி போட்டியில் அவரை வென்றதன் மூலம் 46-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். முதல் செட்டில் தோற்றாலும் அடித்த மூன்று செட்களை தொடர்ச்சியாக வென்று அதகளம் செய்தார்.



காலிறுதியை வென்ற ஜோகோவிச் 


பொறுமையாக, துல்லியமான ஷாட்களை அடித்து, ஜோகோவிச் 4-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ருப்லெவ்வை வென்றார். இதன் மூலம் லண்டன் மண்ணில் தனது ஐந்தாவது பட்டத்தை வெல்லும் பாதையில் இன்னும் ஒரு படி முன்னே சென்றுள்ளார். இந்த வெற்றியின் விளைவாக, உலகின் இரண்டாம் தரவரிசை வீராரக இருக்கும் இவர், பெப்பர்ஸ்டோன் ஏடிபி லைவ் தரவரிசையில் நம்பர் 1 ஆக மாறியுள்ளார்.


அதிகாரப்பூர்வ தரவரிசை தொடருக்கு பின்னர்தான் வெளியிடப்படும் என்றாலும், பெப்பர்ஸ்டோன் ஏடிபி லைவ் தரவரிசையில் ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் நிலைப்பாடுகள் தெரியவரும். முதலிடத்தில் உள்ள கார்லோஸ் ஆல்சரஸ் லைவ் தரவரிசையிலும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமானால், புதன்கிழமை நடைபெறவுள்ள காலிறுதியில் ஹோல்கர் ரூனை வெல்ல வேண்டும். 


தொடர்புடைய செய்திகள்: VJS50 Title Maharaja: தென்மேற்கு பருவக்காற்றில் தொடங்கிய பயணம்.. பாலிவுட்டில் ஜவான்.. வெளியானது விஜய் சேதுபதியின் 50-வது பட டைட்டில்


ராக்கெட்டை கேட்ட குட்டி ரசிகர்


இந்த போட்டியை வென்றதும் ரசிகர்களுடன் கை குலுக்கிய போது, அவரிடம் ஒரு குட்டி ரசிகர் கேட்ட கேள்வியும் அதற்கு ஜோகோவிச் அளித்த பதிலும் வீடியோவாக பதிவாகி வைரலாகி உள்ளது. அந்த சிறுவன் ஜோகோவிச் இடம் உங்களது ராக்கெட்டை எனக்கு தருவீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு ஜோகோவிச், நான் அதற்கு பதிலாக அதைவிட சிறப்பான ஒன்றை தருகிறேன், என்னிடம் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்," என்று கூறி என்ன கொடுக்கலாம் என்று யோசித்து, பின்னர் அவரது கேப்பை கழற்றி அவருக்கு பரிசளித்தார். 



வெற்றிக்கு பின் உள்ள உளவியல்


ஆட்டத்திற்கு பின் ஜோகோவிச், "எல்லா டென்னிஸ் வீரரும் நமக்கு எதிராக வெல்லும் மனப்பான்மையுடன் ஆட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பில்லி ஜீன் [கிங்] கூறியது போல் இது ஒரு பாக்கியம் என்று நான் நினைக்கிறேன். அழுத்தம் என்பது நாம் செய்யும் செயல்களின் ஒரு பகுதி, அது எங்கள் விளையாட்டின் ஒரு பகுதி. அது ஒருபோதும் விட்டுப் போகப் போவதில்லை…" என்றார். "அவர்கள் பெரிய வீரரை வெல்ல விரும்புகிறார்கள், அவர்கள் வெற்றி பெற விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அது நடக்கவில்லை என்பது இன்னும் அதிக மகிழ்வை தருகிறது," என்று இந்த வெற்றிக்கு பின் உள்ள உளவியலை சிரிப்புடன் கூறினார்.