Delhi Flood Despite No Rain : டெல்லியில் வெள்ளம் ஏற்பட மழை மட்டுமே காரணம் அல்ல... நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் பெரிய அளவில் மழை இல்லாத நிலையிலும் எப்படி வெள்ளம் ஏற்பட்டது என்பது குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

கடந்த செவ்வாய்க் கிழமைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் பெரியளவில் மழை இல்லை. ஆனாலும் இன்று காலை டெல்லியில் ஐடிஓ, சிவில் லைன்ஸ் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் உட்பட முக்கியப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. டெல்லியில் பொதுவாகவே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் நிலையில், இந்த திடீர் வெள்ளத்தால் மேலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கனமழை இல்லாமல் திடீர் வெள்ளம் எப்படி ஏற்பட்டது என விவாதங்களும் எழுந்துள்ளன. 

Continues below advertisement

மழையில்லாமல் வெள்ளம் ஏற்பட்டதற்கு சில காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து வரலாறு காணாத வகையில்  உயர்ந்து வருவதே நகருக்குள் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வெள்ளத்துக்கு முதல் காரணமாக கருதப்படுகின்றது. இன்று காலை 9 மணியளவில் யமுனையின் நீர்மட்டம் 207.25 மீட்டராக இருந்தது. யமுனையின் நீர்மட்டம் இந்த அளவிற்கு உயர, ஹரியானா மாநிலத்தில் இருந்து ஹத்னிகுண்ட் தடுப்பணை வாயிலாக வெளியேற்றப்படும் உபரி நீர்தான் காரணம் என கூறப்படுகிறது. பருவ மழை காலத்தின் போது ஒவ்வொரு வருடமும், இதுபோல் ஹத்னிகுண்ட் தடுப்பணை வாயிலாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு யமுனையில் கலப்பது இயல்புதான். இருந்தபோதிலும், இந்த ஆண்டு மட்டும் இந்த அசாதாரண சூழலுக்குக் என்ன காரணம் என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளன. 

 மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், "ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து டெல்லிக்கு உபரி நீர் மிக குறுகிய நேரத்தில் வந்தடைந்துள்ளது. நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக அது கடந்து செல்ல ஒரு குறுகிய பாதை மட்டுமே உள்ளது. வெள்ளமும் மிக வேகமாக பாய்கிறது. இதனால் பல வழிகளிலும் உபரி நீர் வேகமாக யமுனையை வந்தடைந்தால் யமுனையில்  நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல், வண்டல் மண் அதிகமாக சேர்ந்ததன் காரணமாக யமுனை ஆற்றுப் படுகையும் உயர்ந்துள்ளது. இதனால்,  அதிக மழையில்லாவிட்டாலும், யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது" என்று கூறினர்.

டெல்லியில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகனமழை பெய்தது. ஞாயிறு காலை 8.30 மணி நிலவரப்படி 15.3 செ.மீ மழை பதிவானது. இதனால் யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்திருந்த நிலையில் அதில் மேலும் மேலும் ஹத்னிகுண்ட் தடுப்பணை வாயிலாக வரும் நீரும் சேர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் தான் டெல்லி வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.

 

Continues below advertisement