டென்னிஸில் பல சாதனைகள் புரிந்த ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் அவரது கடைசி போட்டியில் விளையாடியபோது உணர்ச்சிவசப்பட்ட ரஃபேல் நடால் அழுவது போன்ற புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்தது. தற்போது. அது குறித்து கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பதிவு வைரலாகி உள்ளது.


ரோஜர் ஃபெடரர்


20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை முதல் முறையாக வென்ற வீரர், விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்ற வீரர் போன்ற அசைக்கமுடியாத சாதனைகள் ரோஜர் ஃபெடரர் வசம் உள்ளது. இவை மட்டுமின்றி 103 ஏடிபி தொடரில் சாம்பியன் பட்டங்கள், 6 ஏடிபி தொடர் பைனல் பட்டம், ஒரு டேவிஸ்கோப்பை வெற்றி, நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக 310 வாரம் இருந்தது, 28 முறை மாஸ்டர்ஸ் தொடர் பட்டத்தை வென்றது, 31 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடியது ஆகிய பல உலக சாதனைகளை ரோஜர் பெடரர் படைத்திருக்கிறார். இந்நிலையில் 41 வயதாகும் அவர், கடந்த சில தினங்கள் முன்பு லேவர்ஸ் கோப்பை தொடர் தான் தனது கடைசி போட்டி என அறிவித்தார்.



கடைசி ஆட்டத்தில் தோல்வி


ரோஜர் பெடரரின் கடைசி போட்டி என்பதால் லேவேர்ஸ் கோப்பை மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் தனது நண்பரும், கடுமையான போட்டியாளருமான ரஃபேல் நடாலுடன் ரோஜர் பெடரர் இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாடினார். சோக் மற்றும் டியோபி ஜோடியை எதிர்கொண்ட இந்த ஜோடி முதல் செட்டை வென்றனர். ஆனால் அடுத்த மூன்று செட்களிலும் இளம் ஜோடியான சோக் மற்றும் டியோபி ஜோடி அவர்களை வென்றது.


தொடர்புடைய செய்திகள்: உருக உருக காதலித்தும் உள்ளம் நோகுதா! ஜாலியா படிங்க லவ் ராசிபலன்கள்!


நெகிழ்ச்சியான அரங்கு


இதனை அடுத்து ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க ரோஜர் பெடரர் விடைபெற்றுக்கொண்டார். பெடரர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதை தாங்கிக்கொள்ள முடியாத அவரது சக போட்டியாளர், நண்பர் ரஃபேல் நடாலும் அவருக்கு அருகில் அமர்ந்து கதறி அழுததைக் கண்ட ரசிகர்கள் நெகழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ரோஜர் ஃபெடரரை ஜோகோவிச் உள்ளிட்ட டென்னிஸ் வீரர்கள் தங்களது தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர்.






விராட் கோலி நெகிழ்ச்சி


ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த ரோஜர் ஃபெடரர், "இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. கண்டிப்பாக நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன், சோகமாக இல்லை. உங்கள் முன் நிற்பதை பெருமையாக கருதுகிறேன். கடைசி போட்டியில் விளையாட முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய டென்னிஸ் பயணம் மிகவும் பிரமாதமான ஒன்று. இதை திருப்பி செய்யவும் நான் விரும்புகிறேன்" என்று கூறி இருந்தார்.


இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி ட்வீட் செய்து இருந்தார். "எதிரெதிர் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படியெல்லாம் உணர்வுகள் கொள்வார்கள் என்று யார் நினைத்தார்கள். அதுதான் விளையாட்டின் அழகு. நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான விளையாட்டு புகைப்படம் இதுதான். உங்கள் தோழர்கள் உங்களுக்காக அழும்போது, உங்களுக்கு கடவுள் கொடுத்த திறமை ஏன் என்று உங்களுக்கு புரியும். இந்த 2 பேருக்கும் எனது மரியாதை" என்று கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி ட்வீட் செய்து அந்த வைரல் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.