ஹரியானா தேர்தல்:
ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி தேர்தல் முடிவுகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதேபோல் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவை எப்படியும் வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி இருப்பதால் அவர் அங்குள்ள மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராடிய பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோரை காங்கிரஸ் தேர்தல் களத்தில் இறக்க திட்டம் இட்டு இருக்கிறது.
இந்நிலையில் தான் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறியதால் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிடட் வினேஷ் போகத் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.
அரசியலுக்கு வருவது குறித்து வினேஷ் போகத் கூறியது என்ன?
கடந்த ஆகஸ்ட் 27 அன்று, ஹரியானாவின் ஜிந்த் நகரில் நடந்த ஒரு நிகழ்வில், வினேஷ் போகத் அரசியலில் சேருவது பற்றி கூறியிருந்தார். இருப்பினும், இது குறித்து பெரியவர்களிடம் ஆலோசிப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மனம் உறுதியுடனும் தெளிவாகவும் இருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பேன் என்று வினேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
பஜ்ரங் புனியாவுக்கு காங்கிரஸின் 'ஆஃபர்':
பஜ்ரங் புனியா காங்கிரஸிடம் இருந்து பட்லி தொகுதியை கேட்டு இருப்பதாகவும் ஆனால் காங்கிரசுக்கு ஏற்கனவே அங்கு ஒரு சிட்டிங் எம்எல்ஏ இருப்பதால், பஹதுர்கர் மற்றும் பிவானி தொகுதி பஜ்ரங் புனியாவிற்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. குல்தீப் வத்ஸ் தற்போது பட்லி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.