மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளிலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில், மின்சாரத்துறையிலும் மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்தை பல வகையில் பயன்படுத்தி வருகிறது. இதன்படி, வீடு, வணிக நிறுவனங்களில் துல்லியமாக மின்சாரத்தின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணககெடுப்பதற்கு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

ஸ்மார்ட் மீட்டர்:


ஸ்மார்ட் மீட்டர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி, மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்க புதிய மின்வழித்தடத்தை அமைக்க வேண்டும். மின்சாரம் விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்ப வருவாயைப் பெறுவதற்காக புதிய டிரான்ஸ்பார்மர், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த வேண்டியதும் அவசியம் ஆகும்.


மறுசீரமைப்பு மின் பகிர்மான திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மத்திய  அரசு ரூபாய் 10 ஆயிரத்து 600 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூபாய் 6 ஆயிரத்து 360 கோடி கடன் வழங்கியுள்ளது. இந்த நிதியாண்டிற்குள் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தினால், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய ரூ.6 ஆயிரத்து 360 கோடி மானியமாக கணக்கில் கொள்ளப்படும்.

மானியம் ரத்தாகும் அபாயம்:


ஒருவேளை இந்த நிதியாண்டிற்குள் இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாவிட்டால் மத்திய அரசு வழங்கிய கடனை வட்டியுடன் மாநில அரசு திருப்பிச் செலுத்த வேண்டும். தமிழக அரசும் இந்த திட்டத்தின்படி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கடந்தாண்டு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் விடுத்தது. ஆனால், அதுதொடர்பாக எந்த  முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.


இந்த சூழலில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாவிட்டால் மறுசீரமைப்பு மின்பகிர்மான திட்டத்திற்காக மானியம் வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த எச்சரிக்கை காரணமாக தமிழக அதிகாரிகள் இதுதொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருப்பதால் மின்துறை அமைச்சர், முக்கியமான உயரதிகாரிகள் முக்கிய முடிவுகளை எடுத்து முதலமைச்சரின் ஒப்புதலைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.