விழுப்புரம் : மக்களுக்கு சேவை செய்ய தான் நம்ம இருக்கிறோம், டெக்னிக்கல் மேப் இல்லாமல் எப்படி ஆய்வு பணிக்கு வந்தீர்கள் என விழுப்புரம் பாதாள சாக்கடை அடைப்பு ஆய்வுபணியின் போது அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக எம்.எல்.ஏ லட்சுமணன்.


பாதாள சாக்கடையில் அடைப்பு பகுதியில் எம்எல்ஏ ஆய்வு


விழுப்புரம் நகர பகுதியான அலமேலுபுரம், வண்டிமேடு உள்ளிட்ட பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுவதாக அப்பகுதி மக்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனுக்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு ஆகியோர் அலமேலுபுரத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்தோடுவதை ஆய்வு செய்தனர்.


அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக எம்.எல்.ஏ லட்சுமணன்


ஆய்வின் போது நகராட்சி அதிகாரி வள்ளி ஆய்வு பணிக்கு தாமதமாக வருகை புரிந்ததாலும், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்ட இடத்தின் மேப் கையில் இல்லாதால் கடுப்பான திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் அதிகாரியிடம் மக்களுக்கு சேவை செய்ய தான் நாம இருக்கிறோம், டெக்னிக்கல் மேப் இல்லாமல் எப்படி ஆய்வு பணிக்கு வந்தீர்கள் என கடுமையாக சாடினார். இதனால் ஆய்வு பணியின் போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள குறைகளை உடனடியாக சரிசெய்து தரவேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து ஆய்வு பணியை முடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.