USA vs SA T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை 2024ன் லீக் சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் போட்டியுடன் முடிவு பெற்றது. அடுத்ததாக இன்று (ஜூன் 19, புதன்கிழமை) முதல் 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 போட்டிகள் தொடங்குகின்றன. சூப்பர்-8 போட்டியின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. தனது லீக் போட்டிகளில் நான்கு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளதால், அமெரிக்க அணி சற்று போராட்டத்தை சந்திக்கலாம்.
தென்னாப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் மோதும் சூப்பர் 8 போட்டியானது ஆன்டிகுவா நார்த் சவுண்ட்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
டி20 உலகக் கோப்பை உட்பட அனைத்து வடிவங்களிலும் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் ரிப்போர்ட்:
கடந்த 20 போட்டிகளில் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 69 ரன்கள். ஆன்டிகுவாவின் நார்த் சவுண்ட், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம், பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற பிட்சாக உள்ளது. மேலும், இந்த ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் ஏற்றது.
வானிலை அறிக்கை:
வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், ஈரப்பதம் 72% ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிதமான வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவ சில ஸ்விங்களை எதிர்பார்க்கலாம். லேசான மழை பெய்யக்கூடும் என்பதால் போட்டியின் தொடக்கத்திலோ அல்லது இடையிலோ சிறிது பாதிப்பு ஏற்படலாம்.
சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம்:
அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளையும் அமெரிக்காவில் விளையாடின. தற்போது சூப்பர்-8 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இரு அணியில் மாற்றம் தேவை. அதன் அடிப்படையில் வேகப்பந்துவீச்சாளர்களை குறைத்துகொண்டு, சுழற்பந்து வீச்சாளர்களின் தேவையை அதிகரிக்க வேண்டும். ஏனெனில், வெஸ்ட் இண்டீஸில் உள்ள பிட்சுகள் பெரும்பாலும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக ஆதிக்கம் செலுத்தும்.
தென்னாப்பிரிக்கா அணியில் என்ன மாற்றங்கள் நிகழலாம்?
தென்னாப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் கேசவ் மகாராஜா, அந்த அணிக்காக அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும், நேபாளத்திற்கு எதிரான கடைசி லீக் சுற்று ஆட்டத்தில் கேசவ் மகாராஜா அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில், அமெரிக்காவுக்கு எதிரான இன்றைய சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் மீண்டும் கேசவ் மகாராஜா சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி விவரம்:
குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, ஒட்னீல் பார்ட்மேன், தப்ரைஸ் ஷம்சி.
கேப்டன் மோனாங்க் படேல் அமெரிக்க அணிக்கு திரும்பலாம்..?
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்க கேப்டன் மோனாங்க் பட்டேல் லேசான காயம் காரணமாக விளையாட முடியவில்லை. இதையடுத்து மோனாங்கிற்குப் பதிலாக ஆரோன் ஜோன்ஸ் அணிக்கு தலைமை ஏற்றார். இப்போது சூப்பர்-8 இன் முதல் போட்டியில் கேப்டன் மோனாங்க் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணிக்கப்பட்ட அமெரிக்க அணி விவரம்:
மோனாங்க் படேல் (கேப்டன்), ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கவுஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவல்கர், அலி கான்.