Neeraj Chopra: பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தயார் நிலையில் இருப்பதை நீரஜ் சோப்ரா வெளிப்படுத்தியுள்ளார்.


பாவோ நுர்மி கேம்ஸ் 2024:


பாவோ நூர்மி கேம்ஸ் 2024 இல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி பின்லாந்தின் துர்குவில் நடைபெற்று வருகிறது. நீரஜ் சோப்ரா தனது பதக்கத்தின் நிறத்தை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளார். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தங்கம் வென்று இருப்பதன் மூலம்,  நீரஜ் சோப்ரா 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தான் தயார் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.






போட்டியின் மூன்றாவது முயற்சியில் 85.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி நிரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார். உள்ளூர் வீரரான டோனி கெரானன் 84.19 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி வீசி இரண்டாம் இடத்தை பிடித்தார்.






ஒலிம்பிக்கில் இரட்டை தங்கத்தை உறுதி செய்வாரா நீரஜ் சோப்ரா?


நீரஜ் சோப்ரா ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, டைமாண்ட் லீக், காமன்வெல்த் விளையாட்டு என அனைத்தை வகையான போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாவோ நூர்மி கேம்ஸ் என்பது அவரது எதிர்பார்ப்புப் பட்டியலில் இல்லாத ஒரு நிகழ்வாகும்.  ஆனால் தற்போது அதிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். டோக்கியோ 2020 ஒலிம்பிக் மூலம்,  இந்தியாவுக்கான முதல் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற பிறகு தனக்கென ஒரு வரலாற்றை பெற்றார். அதன் பிறகு அந்த வேகம் ஒருபோதும் குறையவே இல்லை. 25 வயதான அவர் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மிகப் பெரிய இந்திய விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார்.  மேலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மற்றொரு பதக்கம் வெல்வதன் மூலம் சிறந்த இந்திய தடகள வீரராக தனது பெருமையை மேலும் நீட்டிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதிலும் தற்போது அவர் இருக்கும் ஃபார்மில் பாரீஸ் ஒலிம்பிக்கிலும், ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கப் பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.