டென்னிஸ் உலகில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நேற்றுடன் முடிந்தது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்கரஸ் மற்றும் நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். இந்தப் போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் 6-4,2-6,7-6,6-3 என்ற கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தினார். 


 


இதன்மூலம் தன்னுடைய 19 வயதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கரஸ் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார். இந்த கிராண்ட்ஸ்லாம் தொடர் வெற்றியின் மூலம் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் சர்வதேச வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் மிகவும் குறைந்த வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரர் சாதனையை படைத்துள்ளார். இந்தாண்டு யுஎஸ் ஓபன் தொடருக்கு முன்பாக 4வது இடத்தில் இருந்த அல்கரஸ் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 


 






நடப்பு ஆண்டில் அதிக ஏடிபி வெற்றிகள்:


 


இந்தாண்டு நடைபெற்ற ஏடிபி போட்டிகளில் இவர் அதிகபட்சமாக 55 வெற்றிகளை பெற்றுள்ளார். இந்தாண்டு ஏடிபி போட்டிகளில் அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலிலும் இவர் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக சிட்சிபாஸ் 46 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  மேலும் ஸ்பெயின் நாட்டிலிருந்து சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த 4வது வீரர் என்ற பெருமையை அல்கரஸ் பெற்றுள்ளார். 


 






இவருக்கு முன்பாக ஸ்பெயின் நாட்டிலிருந்து ஜூயன் கார்லோஸ் ஃபெரேரோ, கார்லோஸ் மோயா மற்றும் ரஃபேல் நடால் ஆகியோர் முதலிடத்தை பிடித்திருந்தனர். தற்போது அவர்கள் வரிசையில் அல்கரஸ் இணைந்துள்ளார்.  மேலும் இந்தாண்டு நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் மிகவும் குறைந்த வகையில் இரண்டு ஏடிபி பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை அல்கரஸ் படைத்திருந்தார். 


2021ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் தொடருக்கு முன்பாக அல்கரஸ் டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் 55வது இடத்தில் இருந்தார். இந்தாண்டு தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்ததன் காரணமாக யுஎஸ் ஓபன் தொடருக்கு முன்பாக இவர் தரவரிசையில் 4வது இடத்தில் இருந்தார். யுஎஸ் ஓபன் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நார்வே வீரர் காஸ்பர் ரூட் டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.