தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக விடுமுறை தினம் வரும் என்பதால் பலர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதன்காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 14-ம் தேதி பயணிக்க விரும்புவோர் செப். 16-ம் தேதியும், ஜனவரி 15-ம் தேதி செல்வோர் செப்.17-ம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம். பொங்கல் பண்டிகை இம்முறை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் வருகிறது. இதனால் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே அடுத்த மாதம் வரும் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. அப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் முடிவடைந்தது. அந்தவகையில் பொங்கல் பண்டிக்கான முன்பதிவு விரைவாக முடிந்துவிடும் என்று கருதப்படுகிறது.
இதனிடையே பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்கும் இந்த புதிய டெண்டருக்கு செப்டம்பர் 9 ம் தேதி கடைசி நாள் என்றும், இதன் மூலம், சுமார் 1. 80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அதில் சில ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த முறை பொங்கல் பரிசு தொகை தொடர்பாக அரசின் அறிவிப்பிற்கு பலரும் காத்திருக்கின்றனர்.
2022 பொங்கலுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பு:
பச்சரிசி- 1 கிலோ
வெல்லம்- 1கிலோ
முந்திரி- 50 கிராம்
திராட்சை-50 கிராம்
பாசிப்பருப்பு -1/2 கிலோ
நெய்- 100 கிராம்
ஏலக்காய்- 100 கிராம்
மஞ்சள்தூள்-100கிராம்
மிளகாய்தூள்-100 கிராம்
கடலைபருப்பு-1/4கிலோ
மிளகு-50கிராம்
சீரகம்-100கிராம்
கடுகு-100 கிராம்
புளி-200கிராம்
உப்பு-1/2கிலோ
கோதுமாவு-1கிலோ
மல்லிதூள்-100கிராம்
ரவை-1கிலோ
உளுத்தம்பருப்பு-1/2கிலோ
கைப்பை-1
முழுகரும்பு-1
உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை தமிழ்நாடு அரசு இம்முறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பில் தமிழ்நாடு என்னென்ன பொருட்களை அறிவிக்க உள்ளது என்பது தொடர்பான ஆர்வம் தற்போது முதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.