உத்தர பிரதேசம் நொய்டாவில் குடியிருப்பு வளாகத்தின் பாதுகாவலரை பெண் ஒருவர் அறைந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெண் பேராசிரியரான சுதபா தாஸ், கோபத்தில் தனது காரில் இருந்து இறங்கி, குடியிருப்பு வளாகத்தின் பாதுகாவலர் அருகே சென்று, அவரை மூன்று முறை கடுமையாக அறைந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
குடியிருப்பு வளாகத்தின் கதவை திறப்பதில் காலதாமதம் செய்ததாகவும் அதன் காரணமாக அறைந்ததாக பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாவலர் சச்சின் கூறுகையில், "ரேடியோ ஃப்ரீக்வென்ஸி தொழிற்நுட்பத்தின் அடிப்படையில் பதிவு செய்த கார்களை குடியிருப்பு வளாகத்திற்கு உள்ளே அனுமதித்து வருகிறோம். ஆனால், அதில் அவரது கார் எண் காட்டப்படவில்லை. இதற்குப் பிறகும் நாங்கள் காரை உள்ளே அனுமதித்தோம். ஆனால், அவர் வெளியே வந்து எங்களிடம் மோசமாக நடந்து கொண்டு எங்களை அடிக்க ஆரம்பித்தார். 112க்கு டயல் செய்தோம்" என்றார்.
காவலரை பெண் அறைந்தபோது, யாரும் தலையிடவில்லை. ஆனால், இந்த சம்பவத்தை சக காவலர் ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காவலாளியின் புகாரின் பேரில் அந்த பெண் சிறிது நேரம் கைது செய்யப்பட்டார்.
"காவலரின் புகாரின் அடிப்படையில், அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது" என காவல் நிலைய பொறுப்பாளர் விஜய் குமார் கூறியுள்ளார்.
கடந்த மாதம், குர்கானில் நடந்த மற்றொரு சம்பவத்தின் பின்னணியில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒரு நபர், லிப்டில் மாட்டி கொண்டுள்ளார். பிறகு, அவர் மீட்கப்பட்டுள்ளார். அப்போது, தனது அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரையும் மற்றொரு நபரையும் அவர் அறைந்தார்.
அதே மாதம், நொய்டாவில் பாதுகாவலர் ஒருவரை பெண் தாக்கியும், ஆபாசமான சைகை செய்ததற்காகவும் திட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டார். காவலாளி கதவுகளை திறக்க தாமதம் செய்ததே இச்சம்வத்திற்கு காரணம்.