2021-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின்போது வீரர்கள் மற்றும் அணியின் ஊழியர்கள் உள்ளிட்டோர் பயோ பபுள் முறையில் இருந்தனர். இந்த பாதுகாப்பான பயோ பபுள் முறையில் எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில் BCCI தலைவர் சவுரவ் கங்குலி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு கங்குலி அளித்த பேட்டியில், "பயோ பபுள் முறையில் எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தவுள்ளோம். என்னை பொறுத்தவரை வீரர்களின் பயணம் ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த முறை UAE-இல் IPL தொடர் நடைபெற்ற போது 3 இடங்களில் மட்டுமே நடைபெற்றது. அத்துடன் அங்கு விமான பயணம் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இம்முறை இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் 6 இடங்களில் நடைபெற்றன. மேலும் இங்கு வீரர்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
தற்போது நம்முடைய நாட்டில் இருக்கும் நிலைமையை பார்த்தால் நாளை என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை. அந்த அளவிற்கு தீவிரமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது இருக்கும் சூழல் நமது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த நாங்கள் பல்வேறு நாட்டின் கிரிக்கெட் வாரியங்களை தொடர்புகொள்ள வேண்டும். எனவே அதை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. அதற்கு நிறையவே நேரம் உள்ளது. ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டு ஒரிரு நாட்கள் தான் ஆகியுள்ளது. ஆகவே இதை பற்றி இப்போது சிந்திக்க தேவையில்லை.
ஐபிஎல் போட்டி முழுமையாக நடைபெறவில்லை என்றால் தோராயமாக 2500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். அதனால் அதை எவ்வாறு மீண்டும் நடத்துவது என்பது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். முதலில் கொல்கத்தா அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின்னர் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சன் ரைசர்ஸ் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தச் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி மற்றும் மைக் ஹசி ஆகியோர் சென்னைக்கு தனி விமானம் வர உள்ளனர். அவர்களை சென்னையில் வைத்து தனிமைப்படுத்த சென்னை அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் தற்போது எந்தவித உடல்நல குறைபாடும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அந்த நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பாக ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் டி20 உலக கோப்பை யுஏஇயில் நடைபெற்றால் அதற்கு முன்பாக ஐபிஎல் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.