தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கும் மு.க.ஸ்டாலின் போடவிருக்கும் முதல் கையெழுத்து எதற்காக என்கிற எதிர்பார்ப்பை விட கொரோனாவைக் கட்டுப்படுத்த அவரிடம் என்ன திட்டம் இருக்கிறது என்கிற எதிர்பார்ப்புதான் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. பதவியேற்பு 7 மே 2021 காலை நடைபெறவிருக்கும் நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை அவர் தேர்தலில் வென்ற  மறுதினமே தொடங்கியிருந்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்புப் பணியில் தனியார் மருத்துவமனைகள் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என ட்வீட் செய்திருந்தார்.


 






அதில் அவர்,’மருத்துவ அவசரநிலைக் காலம் என்பதால் 50 சதவிகிதப் படுக்கைகளை ஒதுக்கீடு செய்துவரும் தனியார் மருத்துவமனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்யவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.  கொரோனா பாதித்த மக்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ள விருப்பப்படுவதால் அங்கு கொரோனா வார்டுகளுக்கு என  50 சதவிகித படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும் சிகிச்சைக்கான செலவுகளை நோயாளியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கடந்த வருடம் மார்ச் மாதம் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில்தான் தற்போது தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்கவேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.




இனி எத்தனைப் படுக்கைகள் ஒதுக்கப்படும்?




தனியார் மருத்துவமனைகள் 80 சதவிகிதம் வரை கொரோனா படுக்கைகளாக மாற்ற வாய்ப்புள்ளது




ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இனி 80 சதவிகிதப் படுக்கைகள் வரை தனியார் மருத்துவமனையில் ஒதுக்கப்படும் என்கிறார் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதாரத்துறை இயக்ககத்தின் தலைமை புள்ளியியல் அலுவலர் டாக்டர் குருநாதன். அவர் கூறுகையில், ‘இதுவரை 673 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருக்கும் 60,500 படுக்கைகளில் தற்போது 29,000 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் கூடுதல் ஒதுக்கீடு கேட்டுள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்க்கப்படும் பிற நோயாளிகள் எண்ணிக்கை குறையும் என்பதால் தனியார் மருத்துவமனைகள் 80 சதவிகிதம் வரை கொரோனா படுக்கைகளாக மாற்ற வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்தார்.


இதுதவிர கட்டளை அறை (War room) ஒன்றை உருவாக்கவும் ஸ்டாலின் தலைமைச் செயலாளருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.




கொரோனா காலத்தில்  துறைவாரியாக உத்தரவு பிறப்பிப்பதில் காலதாமதம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த வார் ரூம் உருவாக்கப்படுகிறது




கொரோனா தடுப்புப் பணிகளுக்காக கட்டளை அறைகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தாலும் தற்போது ஸ்டாலின் உருவாக்கும் கட்டளை அறை அதிலிருந்து மாறுபட்டது என்கிறார் முன்னாள் பொதுச்சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் கொரோனா சிறப்பு அலுவலரான டாக்டர் குழந்தைசாமி. அவர் கூறுகையில்,’ மத்திய அரசு குறிப்பிட்ட வார் ரூம் ஆக்சிஜன் மற்றும் படுக்கை தேவைகளுக்காக. ஆனால் தற்போது ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள வார் ரூம் செயலர்கள் அளவிலான உயர்மட்ட வார் ரூம். இது தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்படும். இதில் துறை செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் ஒரே அறையில் இருப்பார்கள். கொரோனா காலத்தில்  துறைவாரியாக உத்தரவு பிறப்பிப்பதில் காலதாமதம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த வார் ரூம் உருவாக்கப்படுகிறது’ என்றார்.


மேலும், ‘தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை வசதிகள் அதிகப்படுத்துவதோடு அல்லாமல் மருத்துவமனைகளுக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளையும் கொரோனா வார்டாகத் தற்காலிகமாக உபயோகித்துக் கொள்வதற்கான யோசனையும் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார். கொரோனா பேரிடர் காலத்தைச் சமாளிக்க இவற்றுடன் இன்னும் பல புதிய திட்டங்களையும் புதிய அரசு இனி வரும் நாட்களில் செயல்படுத்தவிருக்கிறது.