பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். நேற்று மகளிருக்கான துப்பாகிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா தங்கம் வென்றதை அடுத்து இன்று இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 8 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டி முடிவில் 216.8 புள்ளிகள் பெற்று சிங்ராஜ் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்துள்ளார். 










பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர்.


அந்த வகையில், ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவில் இருந்து மூன்று வீரர்கள் பங்கேற்றனர். அதில், சிங்ராஜ் மற்றும் மனிஷ் நார்வால் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். இந்த போட்டியில் மிகவும் எதிர்பாக்கப்பட்ட 19 வயதான மனிஷ் நார்வால் 135.8 புள்ளிகள் எடுத்து ஏழாவது இடத்தில் நிறைவு செய்தார்.


முன்னதாக, பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிபட்சமாக ஒரே தொடரில் மொத்தமாகவே 4 பதக்கங்களைதான் வென்றுள்ளது. ஆனால் இம்முறை ஒரே நாளில் மூன்று, நான்கு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, மொத்தம் 8 பதக்கங்களுடன் வரலாற்றில் பெஸ்ட் பர்ஃபாமென்ஸை பதிவு செய்துள்ளது. 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா களத்தில் உள்ளது. பாரா வீரர் வீராங்கனைகள் வெற்றி பெறுவது அவர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், இந்தியாவுக்கு மட்டுமானதாக இல்லாமல், பார்ப்பவர் ஒவ்வொருவருக்குமானதாக நம்பிக்கை தருவதாக உள்ளது.