விளையாட்டு வரலாற்றில், 2021 ஆகஸ்டு மாதத்தை இந்தியா அவ்வளவு எளிதில் மறந்துவிடாது, மறக்கவும் கூடாது. ஏனெனில், டோக்கியோவில் பதக்க மழை பொழிந்து கொண்டிருக்கின்றனர் நமது பாரா வீரர் வீராங்கனைகள். கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்ற தினம், தோனியின் பிறந்தநாள், சச்சின் ஓய்வு பெற்ற தினம் என அத்தனை நாட்கள் நாம் நினைவுக்கூர இருக்கின்றது. அதே போல, ஒரு விளையாட்டு ரசிகராக, டோக்கியோவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்வை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.
முன்னதாக, பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிபட்சமாக ஒரே தொடரில் மொத்தமாகவே 4 பதக்கங்களைதான் வென்றுள்ளது. ஆனால் இம்முறை ஒரே நாளில் மூன்று, நான்கு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, மொத்தம் 7 பதக்கங்களுடன் வரலாற்றில் பெஸ்ட் பர்ஃபாமென்ஸை பதிவு செய்துள்ளது. 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா களத்தில் உள்ளது. பாரா வீரர் வீராங்கனைகள் வெற்றி பெறுவது அவர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், இந்தியாவுக்கு மட்டுமானதாக இல்லாமல், பார்ப்பவர் ஒவ்வொருவருக்குமானதாக நம்பிக்கை தருவதாக உள்ளது.
ஆகஸ்டு 29-ம் தேதி நடந்த மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் சீன வீராங்கனை ஜியோ யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் அவர் தோற்றிருந்தாலும், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான டி-47 உயரம் தாண்டுதல் போட்டியில், இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கமும், ஆடவருக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர். இதன்மூலம் இந்த முறை பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி மொத்தமாக அதிக பதக்கங்களை வெல்வது உறுதியாகி இருந்தது. அதை தொடர்ந்து, இன்று காலை முதலே பதக்க வேட்டையை நடத்தியது இந்தியா.
இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா தங்கப்பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் தங்கப்பதக்கம் இது. பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலிலும் இந்தியாவுக்கு இதுவே முதல் தங்கப்பதக்கம்.
அடுத்து நடந்த வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கம் வென்றார். போட்டியின் தொடக்கம் முதலே முன்னிலை பெற்று வந்த யோகேஷ், போட்டி முடிவில் இரண்டாம் இடம் பிடித்தார். வட்டு எறிதல் உலக தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர், இந்தியாவுக்காக வட்டு எறிதலில் பதக்கம் வென்று தந்துள்ளார்.
மேலும், இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், குர்ஜார் சிங் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இதனால், ஒரே நாளில் இந்தியா நான்கு பதக்கங்களை வென்று வரலாற்று சிறப்புமிக்க பர்ஃபாமென்சை பதிவு செய்துள்ளது.
கிட்டத்தட்ட இன்று காலை ஒரு மணி நேரத்தில் 4 பதக்கங்களை இந்தியா வென்று குவித்தது. அடுத்தடுத்து பொழிந்த பதக்க மழையால், பாராலிம்பிக் தொடர் கவனம் பெற்றது. இன்னும் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன், வருண் பாட்டி ஆகியோர் இன்னும் விளையாடாத நிலையில், இந்தியாவுக்கு இன்னும் சில பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகிவிட்டது. டோக்கியோவில் இருந்து கெத்தாக நாடு திரும்ப காத்திருக்கின்றனர் பாரா வீரர் வீராங்கனைகள்.