மானுட சமூகத்திற்கே தமிழனின் கொடை திருக்குறள். இந்திய தேசிய நூலாகும் தகுதி மட்டுமல்ல உலகின் தேசிய நூலாகும் தகுதியும் கொண்டது. திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நீதி நூல் என்பதற்கும் வாழ்க்கை நூல் என்பதற்கும் அதிக வேறுபாடு உண்டு.
உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது இதனை வலியுறுத்தும் விதமாக 13.4.2005 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தமிழக அரசியல் கட்சிகள் , பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் திருக்குறள் தேசிய நூலாக்கப்படும் என்று கூறியதுடன் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடியும் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீர்ர்களிடம் உரையாற்றும்போதும், இன்னும் பிற கூட்டங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
நம் பாரத நாடு மிகப்பெரிய நாடு. இயற்கையமைப்பில், தட்பவெப்ப நிலையில், மழையளவில் வேறுபாடுகள் உள்ளன, விளைச்சலில் மக்கள் வாழ்க்கை முறையிலும் கூட பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. பனிமூடிக் கிடக்கும் உயர் மலைகளும், வற்றாத ஜீவ நதிகள் பாயும் வளமிக்க சமவெளிகளும், மனித இனத்தின் காலடி படாத வறண்ட பாலைவனங்களும் உள்ளன. பாரதத்தில் வேட்டையாடி காட்டுப் பொருட்களைச் சேகரித்து வாழும் பழங்குடி மக்களும் உண்டு, நாகரிக மேம்பாடு அடைந்த நகர்ப்புற மக்களும் உண்டு. பல தேசத்தவர் குடிபெயர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் தத்தம் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் கொண்டுள்ளனர். ஆயினும் நமது இந்திய மக்களை ஒன்றிணைக்கும் வகையில் கலாச்சாரம் பண்பாடு , அரசியல் , கலை வடிவங்கள் போன்றவை உள்ளன.
பண்டைக்காலம் தொட்டே ஒருமைப்பாடு தொடர்ந்து வந்துள்ளது. நாட்டின் காவியங்களான ராமயணமும், மகாபாரதமும் வட நாட்டில் மட்டுமன்றித் தென்னாட்டிலும் பரவியுள்ளது. கடந்த இரண்டு நூற்றாண்டில் ஆங்கிலேயரின் நிர்வாகம் , நமது நவீனக் கல்வி மற்றும் பொருளாதார முறைகளினாலும் ஒருமைப்பாடு ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் நமது தேசிய சினனங்கள், இலச்சினைகளும் நமது ஒருமைப்பாட்டினை பேணி வருகிறது. ஆதலால் தான் அறிவும் , அறமும்,திறமும் கொண்ட தேசிய நூல் இன்றியமையாத ஒன்றாகிறது. அந்த தேசிய நூலுக்கான தகுதி நமது திருக்குறக்கு உண்டு.
நமது தேசிய சின்னங்கள் ஒவ்வொன்றும் ஒர் தனித்துவத்தைக் கொண்டன. தேசிய நூல் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும் பலமொழிகளைக் கொண்ட ஒரு நாட்டில் ஒவ்வொரு இந்திய மொழியிலும் பெரும் சான்றோர்கள் எழுதிய நூல்கள் பல உண்டு ,எனவே தேசிய நூலாக எந்த நூலைத் தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுப்பதற்கான அளவீடுகள் யாவை? போன்றவை குழப்பத்திற்குரியவை.
இந்தக் குழப்பத்திற்கு விடுதலைப் போராட்டம் எவ்வாறு பல இனம், மொழி , கலாச்சார , வட்டார வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டது போலவே. சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது ஒருமைப்பாட்டை பேணிக்காக்கும் அரசியலமைப்பின் கூறுகளோடு ஒத்துப்போகும் நமது திருக்குறளுக்கு அந்த தகுதி உண்டு என்பது புலனாகும்.
அரசியல் அமைப்பு ஒவ்வொன்றிற்கும் முகவுரை ஒன்று உண்டு அதில் அதன் குறிக்கோள்களும் அடிப்படை கருத்துக்களும் அடங்கியுள்ளது. நீண்டகாலமாக எதிர்நோக்கி இருக்கும் இலட்சிய சமுதாயக் கனவை நாடு அடையும் நோக்கத்தோடு நமது அரசியல் சாசன வரைவாளர்களும் அரசியலமைப்பின் திறவுகோலான முகவுரையை வரைந்தனர். இம்முகவுரை கோட்பாடுகள் மட்டுமல்லாமல் அரசமைப்பு முழுவதும் உற்று நோக்கினால் காணப்படும் கோட்பாடுகளான, இறையாண்மை பெற்ற அரசானது எல்லா மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல், நீதி கிடைக்கவும், எண்ணம்,பேச்சு, கருத்து, நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றில் சம வாய்ப்பையையும் , அந்தஸ்தையும் பெற்றுத் தருவதோடு , நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளையாமல் தனி மனிதனின் கெளரவத்தை உறுதிப்படுத்திச் சகோதரத்துவத்தை வளர்க்கவும் வழிகோலுகிறது. மேலும் அரசியலமைப்புச் சட்டத்தினை கூர்ந்து நோக்கினால் அதன் அடிப்படைக் கோட்பாடுகளான, இறையாண்மை , அடிப்படை உரிமைகள் , நல அரசு , நீதித்துறை , அமைச்சரவை , சமத்துவம் , சமூக நீதி , சமயச் சார்பற்ற தன்மை போன்றவற்றிற்கும் திருக்குறளில் உள்ள கோட்பாடுகளும் பொருந்திப் போவது தெரிய வரும்.
இறையான்மை பெற்ற அரசு என்பது எந்தவித அந்நிய சக்திக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருப்பதை வள்ளுவர் ”படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு” என்றும், அரசு நெறிமுறைக் கோட்பாடுகளில் உள்ள கருத்துக்களின் அடிப்படையில் சமூக நீதி அடிப்படையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுதல் என்பவற்றை “ பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எனும் நல அரசிற்கான இலக்கணமாகவும் வள்ளுவர் கூறுகிறார். இந்திய அரசமைப்பு சட்ட்த்தின் முன் அனைவரும் சமம் என்பதை பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் என வள்ளுவர் உரைக்கிறார்.
திருவள்ளுவர் அரசியலைப் பற்றிப் பேசும் பொழுது உலக அரசியல் சட்டங்களையெல்லாம் கருதவோ, படிக்கவோ, எண்ணவோ அவருக்கு வாய்ப்பில்லை. அவருடைய அரசியல் சட்டம் சுய சிந்தனையிலே இந்த நாட்டின் மண்ணுக்கேற்றவாறு , நிலத்திற்கேற்றவாறு,தகுதிக்கேற்றவாறு அமைந்த ஒரு சட்டம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நீதிமன்றங்கள் ,குற்ற இயல் நீதி வழங்குகின்ற மன்றங்கள் குறளின் அமைப்பை ஒப்பு நோக்கினால் குறள் நெறி அமைப்பு சட்டத்திற்கு ஒத்து இருக்கிறது என்று நிர்ணயம் செய்து சொல்லும். மேலும் நல அரசைக் கொண்ட பாலியல் தொழில் , கள்ளுண்ணான்மை, சூதாடுதல் போன்றவை இருக்கவேண்டியதில்லை என கடிந்துள்ளார்.
வள்ளுவர் காலத்தில் அரசன் குடிகளைத் தழுவி ஆட்சி நடத்தவேண்டும் என்ற கருத்து இன்றைய மக்களாட்சித் தத்துவத்தின் தேர்தலைக் குறிக்கிறது, அரசுகள் மக்களை தழுவி ஆட்சி செய்தால் அடுத்து வரும் தேர்தலில் ஆளுவோர் பின் மக்கள் நிற்பார்கள் என்கிறது ”மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு”. அரசுக்கு இலக்கணம் கூறிப் பின் அரசை நடத்த பொருள் தேவை என்பதை அதுவும் இயற்றல் என்றால் பொருள் வருவதற்கு புதிய வழிகளை கண்டுபிடித்து , ஈட்டல் , அவற்றை ஒழுங்காகக் கொண்டு வந்து சேர்த்துப் பின் காத்தல், கொஞ்ச காலம் காத்து பின்னர் ”பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்” எல்லாருக்கும் சமமாக பகுத்தளிக்க வேண்டும் என்பது சிந்திக்கத்தக்கது.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 முதல் 28 வரை சமயச் சுதந்திரத்திற்கான உரிமை எனும் பகுதியில், சமயச் சுதந்திரம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அரசமைப்பானது தம் முகப்புரையில் இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாக அறிவித்துள்ளது. எனவே, இந்திய அரசின் சமயம் என்றோ ஆதரவு பெற்ற சமயம் என்றோ அதில் எச்சமயத்தையும் அறிவிக்கப்படவில்லை. அதனைத் தவிர்த்துள்ளது. ஆனால் எல்லாச் சமயங்களும் சமமாக மதிக்கப்பட வழி வகுத்துள்ளது. அதே போல எல்லாச் சமயத்தினரும் திருக்குறளை தத்தம் சமயமாக நினைத்து சொந்தம் கொண்டாடுகின்றார்கள் அதேபோல வள்ளுவரும் எல்லாச் சமய கருத்துகளையும் குறளில் கையாண்டுள்ளார். பண்டைய காலத்திலேயே அவர் சமயப்பொதுமை, மற்றும் சமய நல்லிணக்கம் குறித்துச் சிந்தித்திருப்பதும், அஃது இக்காலப் சமய நல்லிணக்க கோட்பாட்டை ஒத்திருப்பதும் அசாதாரணமானது.
மக்கள் எல்லோரும் சம நிலையில் இல்லை. சிலர் செல்வராக உள்ளனர் . சிலர் வறுமையில் உள்ளனர்.சிலர் செல்வாக்குடையவராய் இருப்பர். சிலர் அந்நிலையில் இல்லை. சிலர் அறிவில் உயர்ந்தவராக இருப்பர். பலர் அதில் குறைந்தவராய் இருப்பார்கள். இவர்களையெல்லாம் ஒரே மாதிரியாகப் பாவித்து முறைசெய்தால் நீதி எங்கனம் வழங்க முடியும்? எனவேதான் சம நிலையில் இல்லாதவர்களை சமன் செய்து பின்னர் சீர்துக்க வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். இந்திய சமூக சூழலில் இவ்வாறாக உள்ள மக்களுக்கு சமவாய்ப்பளித்து மேம்படுத்தவதுதான் சமூக நீதி என்பதை
”சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி” என்கிறார்
தமிழினத்தில் தோன்றிய திருவள்ளுவர் தமிழ் மொழியில் திருக்குறளை இயற்றிருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் , தமிழ், தமிழர் என குறிப்பிடவில்லை . திருக்குறள் உலகத்திற்கானது. நாடு, இனம் மொழி , சமயம் முதலிய எல்லைகளைக் கடந்து மானுட சமூகத்தின் மேம்பாட்டையே மையமாக்க் கொண்டு விளங்குவது. வேற்றுமைகளை விளைவிக்காதவாறு ஒரு நாட்டையோ, ஒரு மொழியையோ , ஓர் இனத்தையோ கடவுளையோ சிறப்பித்துக் கூறவில்லை.
நமது தேசிய இலச்சினை வாசகமான ”சத்தியமேவ ஜெயதே” “ வாய்மையே வெல்லும்” என்பதை வலியுறுத்தும் விதமாக வாய்மை என்ற அதிகாரத்தில் பிரதிபலித்துள்ளார். அரசியலமைப்பின் முகவுரையையும், உறுப்பு 14 ஆம் உற்று நோக்கினால் இந்தியாவில் குடிகளும் , அமைச்சர் முதல் ஜனாதிபதி வரை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தும் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்பது புலனாகும்.
இந்திய மொழிகளுள் தமிழும் ஒன்றல்லவா? அது உலகளாவிய ஒரு இந்திய மொழிதானே! தேசிய கீதம் இந்திய மொழிகளுள் ஒன்றான வங்க மொழியில் இருக்கும்போது , தேசிய நூல் இந்திய மொழிகளில் ஒன்றான செந்தமிழில் இருக்கலாம். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட்டால் இந்திய ஒருமைப்பாடு வளரும். தேசிய இலக்கியமாக திருக்குறளுக்கு தகுதி உண்டு என்று எடுத்துச் சொல்வது தமிழரின் உரிமையாகும். ஏற்றுக்கொள்வது மைய அரசின் கடமையுமாகும்.