ஆப்கானிஸ்தான் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த நாட்டுப்புறக்கலைஞர் ஃபவாத் அந்தராபியை, தலிபான்கள் அவரது வீட்டிற்கு வெளியே இழுத்துப்போட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம்  பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தானில் பல பகுதிகள் படிப்படியாக  வந்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ராணுவ படைகளை அந்நாட்டு அதிபர் விலகிக்கொண்டதையடுத்து வன்முறைகள், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளின் கூடாராமாக மாறி வருகிறது. குறிப்பாக தலிபான்களின் ஆட்சிக்கு  கீழ் எங்களால் வாழவே முடியாது என அகதிகளாக வெளிநாடுகளுக்குத் துயரத்தோடு பறந்து செல்கின்றனர் ஆப்கானிய மக்கள். ஒரு வேளை வேறு வழியின்றி மக்கள் அங்கேயே வாழ்ந்தாலும் அவர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மக்களின் சுதந்திரத்தைப்பறிப்பது போன்ற செயலாக உள்ளது.





குறிப்பாக  ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய பெண்கள் தனியாக  வெளியே போகக்கூடாது என்றும், அப்படி வெளியே சென்றால் ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும், பெண்கள் யாரும் பணிக்கு செல்லக்கூடாது போன்ற பல்வேறு விதிகளை அமல்படுத்தியுள்ளனர். இதோடு மட்டும் நின்றுவிடவில்லை மக்களை மகிழ்விக்கும் இசைக்கும் ஆப்கானிய அரசு தடை விதித்துள்ளது. அப்படி அவர்கள் விதித்தத் தடையை மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்படும் நிகழ்வுகள் தான் அரங்கேறுகிறது.


ஆம். ஆப்கானிஸ்தானில் மிகவும் பிரபலமான நாட்டுப்புற கலைஞராக வலம் வந்தவர் ஃபவாத் அந்தராபி. இவர் அந்தராபி பள்ளத்தாக்கில் உள்ள பக்லான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார். புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரான இவர் அந்நாட்டு மக்களை புகழ்ந்து பல பாடல்களை பாடியுள்ளார். இதோடு ஆப்கானிஸ்தானில் பெருமைகளை அந்நாட்டு மக்கள் எளிதில் புரியும் வகையில் அந்த ஊர் பாணிகளில் பாடுவதில் வல்லமை பெற்றவராக திகழ்ந்து வந்துள்ளார். இதனால் இவரின் பெருமைகளை அறியாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் என்ன பயன்? தலிபான்கள் தான் இஸ்லாத்தில் இசை கிடையாது என ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதித்து விட்டனர். எனவே அதனை மீறி பாடிய மற்றும் அவர்களுக்குப் பிடிக்காத நாட்டுப்புற கலைஞரான ஃபவாத் அந்தராபியை அவரது வீட்டின் முன்பே கொடூரமாக சுட்டுக்கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





இதுக்குறித்து நாட்டுப்புற கலைஞர் பவாத் அந்தராபியின் மகன் தெரிவிக்கையில், தாலிபான்கள் எங்களது வீட்டிற்கு வந்து என் தந்தையினை தேடினார்கள். ஆனால் இவர்கள் பல முறை வந்துள்ளதால் எங்களுக்கு எந்த சந்தேகமும் எழவில்லை. மேலும் தந்தையுடன் வந்து தேநீர் எல்லாம் அருந்தியதாக தெரிவித்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்,  என் தந்தையை வீட்டிற்கு வெளியே இழுத்துப்போட்டு தாக்கியதோடு தலையில் சுட்டுக்கொன்றுவிட்டதாக வருத்தத்துடன் கூறினார். இதுவரை நாட்டுப்புற பாடகரான என் தந்தை, அவரது பாடல் வழியாக ஆப்கானிஸ்தானிய மக்களை மகிழ்த்து வந்தவர். கிராமப்புறங்கள் எங்கும் இவரை அறியாதவரே இருக்க முடியாது. இப்படி மக்கள் கலைஞராக இவரை தாலிபான்கள் சுட்டுக்கொன்றது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.





இந்நிலையில் தான் இச்சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளுர் தலிபான் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதேப்போன்று தான் கடந்த ஜூலை மாதம், ஆன்லைனில் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிடுவதில் பிரபலமான ஆப்கானிஸ்தான் காவல்துறை அதிகாரியை தலிபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.