ஜப்பான் தலைநகரான டோக்கியோயில் ஜூலை 23ம் தேதி துவங்குகிறது ஒலிம்பிக் தொடர். உலகமெங்கும் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் தொடருக்கு தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் 50 நாட்களில் ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ள சூழலில் இந்திய அணி சார்பில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அணியவுள்ள ஜெர்சியை இந்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறம், நீளம், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது வீரர்கள் அணிய உள்ள ஜெர்சி. Li-Ning என்ற நிறுவனம் இந்திய ஒலிம்பிக் அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்ஸர் செய்துள்ளது, அதே நேரம் துவக்க விழாவின் போது இந்திய அணி அணியும் ஜெர்சியை Raymond நிறுவனம் ஸ்பான்ஸர் செய்துள்ளது.
இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீரர்களான பஜ்ரங் பூனியா, நீரஜ் சோப்ரா, ரவிக்குமார் தஹியா, சுமித் மாலிக், சீமா பிஸ்லா ஆகியோர் இந்த ஜெர்சி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதுவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 100கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
"ஒலிம்பிக் என்பது உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஒரே மேடையில் சந்திக்கும் ஒரு நிகழ்வு, நம் வீரர்கள் சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி, நாட்டிற்கு பெருமை சேர்த்து பதக்கம் வெல்வார்கள் என நம்புகிறேன்" என விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.