தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு பணிகளை மாவட்டந்தோறும் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார். பல பகுதிகளில் கொரோனா வார்டில் உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐ.சி.யு. வார்டு படுக்கைகள், சாதாரண வார்டு படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டு அவற்றை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையத்தை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.




இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்வ கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமும் குறைந்து வருவது நம்பிக்கையளிக்கிறது.


தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிரந்தரமான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், உள்கட்டமைப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க மாவட்டம்தோறும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




ராணிப்பேட்டை புதிய மாவட்டம் என்பதால், மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையிலும் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ராணிப்பேட்டை அடுத்த வாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் விபத்தினால் கண் பார்வையிழந்த தற்காலிக செவிலியருக்கு பணி நிரந்தரத்திற்கான முன்னுரிமை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும்” என்று கூறினார்.


தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த வாரம் 36 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிவந்த நிலையில், நேற்று 24 ஆயிரம் என்ற அளவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருகிறது.


மேலும் படிக்க : Tamil Nadu 12th Exam News Live: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு