டோக்கியோ ஒலிம்பிக் ஆண்டு என்பதால் அதற்கு தகுதி பெற்ற வீரர் வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற வீரர் வீராங்கனைகளும் பல்வேறு நாடுகளுக்கு சென்று பயிற்சி செய்து வருகின்றனர்.  அந்தவகையில் ஈட்டி எறிதல் விளையாட்டில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் கடந்த ஓராண்டாக கொரோனா பரவல் காரணமாக எந்தவித சர்வதேச தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்தச் சூழலில் தற்போது ஐரோப்பா சென்று அங்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில் நேற்று லிஸ்பான் நகரில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இவர் பங்கேற்றார். அப்போது தொடக்கத்தில் சற்று சிரமம் பட்ட நீரஜ் சோப்ரா, தனது மூன்றாவது முயற்சியில் 83.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அதன்பின்னர் வீசிய முயற்சிகளில் 78.50 மீட்டர் வீசினார். மேலும் இரண்டு முறை ஃபவுல் செய்தார். எனினும் இவர் மூன்றாவது முயற்சியில் வீசிய தூரத்தை யாரும் கடக்கவில்லை. எனவே இவர் அப்போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள தேசிய சாம்பியன் நீரஜ் சோப்ராவிற்கு இந்தத் தங்கப்பதக்கம் நல்ல உத்வேகம் அளிக்கும் என்று கருதப்படுகிறது. 




ஏனென்றால், கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு சர்வதேச போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அதில் அவர் 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து டோக்கியோ ஒலிம்பிக் தகுதி தூரமான 85 மீட்டரை கடந்து ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றார். அதன்பின்னர் அவர் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. அதன்பின்னர் தேசிய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் இவர் கலந்து கொண்டார். அதில் 88.07 மீட்டர் தூரம் ஈட்டி ஏறிந்து தனது தேசிய சாதனையை அவரே முறியடித்திருந்தார். 


அதன்பின்னர் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை என்று அண்மையில் அவர் வருத்ததில் இருந்தார். மேலும் இவர் ஐரோப்பா செல்வதற்கும் கொரோனா காலம் என்பதால்  விசா பிரச்னை ஏற்பட்டது. எனினும் அதிலிருந்து தற்போது விடுபட்டு அவர் மீண்டும் ஈட்டி எறிதலில் கவனம் செலுத்தி வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும் வீரர்களில் இவரும் ஒருவர். ஆகவே தற்போது நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக தனது ஃபார்மை பிடித்துள்ளது பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று அவர் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அசத்துவார் என்று நம்பிக்கை தற்போது அதிகமாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!