தாம்ஸ் கோப்பை ஆடவர் குழு பேட்மிண்டன் 2022 போட்டிகளில் தாய்லாந்து நாட்டில் கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் லக்ஷ்யா சென்,கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், சிராக் செட்டி-சத்விக் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் காலிறுதியில் இந்திய அணி மலேசிய அணியை வீழ்த்தியது. அதன்பின்னர் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி டென்மார்க் அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் முதலில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் விக்டர் அக்சில்செனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான அக்சில்சென் 21-13,21-13 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதன்பின்னர் சிராக் மற்றும் சத்விக் இணை அர்ஸ்டூப்-கிறிஸ்டியன் இணையை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் 21-18,21-23,22-20 என்ற கணக்கில் போராடி போட்டியை வென்றது. இதன்மூலம் இந்திய அணி 1-1 என சமன் செய்தது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் ஆண்டர்ஸ் ஆண்டோன்செனை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக 21-18, 12-21, 21-15 என்ற கணக்கில் போட்டியை வென்று 2-1 என இந்தியாவிற்கு முன்னிலை கொடுத்தார்.
அடுத்து நடைபெற்ற ஆடவர் இரட்டையர் போட்டியில் அர்ஜூன் -துரூவ் இணை டென்மார்க் நாட்டின் ரஸ்மசூன்- சோக்கார்டு இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் இந்திய ஜோடி 14-21, 13-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமமாக இருந்தது. போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க கடைசியாக ஒற்றையர் போட்டி நடைபெற்றது.
அதில் இந்திய வீரர் பிரணாய் டென்மார்கின் ரஸ்மஸ் கேம்கேவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் டென்மார்க் வீரர் கேம்கே 21-9 என்ற கணக்கில் வென்றார். இதனால் பின் தங்கியிருந்த பிரணாய் அசத்தலாக மீண்டு வந்து அடுத்த இரண்டு கேம்களை 21-9,21-12 என வென்றார். அத்துடன் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி டென்மார்க்கை வீழ்த்தியது. இதன்மூலம் முதல் முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முன்பாக இந்திய அணி 1952,1955 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் தாமஸ் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. அந்த மூன்று முறையும் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. இதன்காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்திருந்தது. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி இந்தோனேஷியா அணியை எதிர்த்து விளையாடுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்