கங்குலியும் டோனா ராயும் சிறுவயதிலேயே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தனர், கால்பந்து பயிற்சிக்கு செல்லும் இடத்திற்கு அருகே டோனா ராய் வசிப்பதை சவுரவ் கங்குலி தெரிந்து வைத்திருந்தார். சில சமயங்களில் டோனாவின் பார்வை தம்மீது படுவதற்காக அவளின் பள்ளியை பல முறை கடந்து சென்றதாக கூறும் கங்குலிக்கு பள்ளி பருவத்திலேயே காதல் தொடங்கிவிட்டது.
உணவகத்தில் முதல் சந்திப்பு
கொல்கத்தாவில் உள்ள மாண்டரின் என்னும் சீன உணவகத்தில் சவ்ரவும் டோனாவும் தங்களது முதல் சந்திப்பை நிகழ்த்தினர். சவ்ரவ் கங்குலி ஆர்டர் செய்த உணவின் அளவை கண்டு ஆச்சரியர்ப்பட்ட டோனா ராய்க்கு அந்த உணவு முழுவதையும் கங்குலி சாப்பிட்டு முடித்தபோது ஆச்சரியம் மேலும் அதிகரித்தது. அடிக்கடி நடக்கும் சந்திப்புகள் மூலம் இந்த ஜோடியின் காதல் மேலும் மேலும் அழகானது.
பெற்றோர்களின் எதிர்ப்பு
கங்குலியின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்த தொடக்கத்திலேயே கங்குலியின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனார். பல ஆண்டுகளுக்கு முன்பு டோனாராயின் தந்தைக்கும் கங்குலியின் குடும்பத்திற்கும் ஏற்பட்ட சில பிரச்னைகளே அதற்கு காரணமாக இருந்ததாக கூறும் டோனாராய், தனது காதல் மீதான பெற்றோர்களின் எதிர்ப்பை பற்றி கவலை கொள்ளாமல் நம்பிக்கையுடன் கங்குலி இருந்ததாக குறிப்பிடுகிறார்.
ரகசிய திருமணம் செய்து கொண்ட கங்குலி
இவர்களின் காதல் இருவரது வீடுகளிலும் தெரிந்த நிலையில் டோனாவின் நடன நிகழ்ச்சிகளுக்கு சவ்ரவ் கங்குலி செல்வதும், கங்குலியின் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க டோனா ராய் செல்வதும் இந்த ஜோடிகளின் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக மாறியன. பெற்றோர்களின் எதிர்ப்பு தொடர்ந்த நிலையில் எதிர்ப்பை மீறி டோனாவை ரகசிய திருமணம் செய்து கொள்ள சவ்ரவ் கங்குலி திட்டமிட்டார்.
இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த உடனே பதிவுத் திருமணம் செய்ய டோனாவை ரிஜிஸ்டர் ஆபீஸிற்கு அழைத்துச் சென்ற கங்குலி, ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமலேயே வீடுதிரும்பினார். பின்னர் தனது சக கிரிக்கெட் நண்பருக்கு சொந்தமான இடத்தில் ரகசியமாக டோனாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களின் திருமணத்தை ஆறு மாதங்கள் வெளி உலகிற்கு சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இருவரின் பெற்றோர்களும் இவர்களுக்கான துணையை தேடத் தொடங்கி இருந்தபோது, உள்ளூர் நாளிதழ் ஒன்று சவ்ரவ் கங்குலி-டோனா ராய் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட செய்தியை வெளியிட்டது. தாங்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டிய தருணத்தை அந்த ஜோடிக்கு இந்த விவகாரம் ஏற்படுத்திக் கொடுத்தது.
குறையாத பெற்றோர்களின் கோபம்
டோனா மீதும் கங்குலியின் மீது டோனாவின் குடும்பத்தினர் கடும் கோபம் கொண்டதுடன் அவர்களின் காதல் திருமணத்தை ஏற்க மறுத்தனர். நாளடைவில் இந்த ஜோடிகள் மீதான கோபம் குறைந்து காதலை ஏற்றும் கொண்டனர்.
இவர்களின் முறையான திருமணம் 1997ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. இதில் ஏராளமான முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு இந்த காதல் ஜோடியை வாழ்த்தினர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக சனா கங்குலி என்ற அழகான மகளும் உள்ளார்.