திருவண்ணாமலையில் வரும் 16-ஆம் தேதி நடக்கும் 36 வது இளையோர் மாநில தடகளப் போட்டிகளை விளையாட்டுதுறை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் இந்த தடகள போட்டியில் 4 ஆயிரம் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள் என மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில், "திருவண்ணாமலை மாவட்ட உள் மாவட்ட விளையாட்டு அரங்கில் 36-வது இளையோர் மாநில தடகளப் போட்டிகளை திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து வரும் 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த இளையோர் மாநில தடகளப் போட்டிகளை தொடக்க விழா வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இளையோர் மாநில தடகளப் போட்டிகளில் 14 ,16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த இளையோர் மாநில தடகளப் போட்டிகள் நான்கு பிரிவுகளாகவும், இருபாலரும் தனித்தனியாக ஆண்களுக்கு 64 போட்டிகளும், பெண்களுக்கு 62 போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு 225 விளையாட்டு வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து வருகை தர உள்ள விளையாட்டு வல்லுநர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்கும் வீரர்,வீராங்கனைகளுக்கு தங்குவதற்கும் அவர்களுக்கு தேவையான உணவு உட்பட எல்லா அடிப்படை வசதிகளையும் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு மைதானத்தில் மருத்துவ குழுவினர் அவசர ஊறுதி ,தீயணைப்பு வாகனங்கள் , காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மேலும் இவைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு உடனடியாக சான்றிதழ்களும், வெற்றி கோப்பைகளும் அளிக்கப்படும். இந்த விளையாட்டில் விளையாடும் வீரர், வீராங்கனைகளை திறமைகளின் அடிப்படையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இளையோர் மாநில தடகளப் போட்டிகளின் இறுதி நாளில் நடைபெறும் போட்டிகளின் கோப்பைகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு அளிக்க உள்ளார்” என்று தெரிவித்தார். அப்போது தடகள சங்கச் செயலாளர் புகழேந்தி மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.