நன்னிலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் பல மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே கிடாரம்கொண்டானில் திருவிக அரசு கலைக் கல்லூரி மட்டுமே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இதேபோன்று மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த இரண்டு இடங்களில் மட்டும் தான் அரசு கல்லூரிகள் என்பது இருந்து வந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வெகு தூரம் சென்று இந்த கல்லூரிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக கல்லூரி அமைக்க வேண்டும் என தொடர்ந்து இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மாணவர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பாரதிதாசன் அரசு உறுப்பு கலை அறிவியல் கல்லூரி என்பது தொடங்கப்பட்டது.




குறிப்பாக நன்னிலம் பகுதியில் ஏழை எளிய குடும்பத்தினர் அதிகளவில் வசித்து வந்த நிலையில் அந்த பகுதியில் கல்லூரி கொண்டுவரப்பட்டது மிகுந்த வரவேற்பு பெற்றது. அதன் அடிப்படையில் நன்னிலத்தில் அமையப்பட்ட கல்லூரியில் நன்னிலம் ஆண்டிபந்தல் சன்னாநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நன்னிலம் அரசு உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 2021 மார்ச் மாதத்தில் இருந்து மின்கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின்சாரத்தை துண்டித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மாணவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.




இந்த கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை என 2300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நன்னிலம் அரசு உறுப்பு கலை கல்லூரியில் சுமார் 17 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் பலமுறை கல்லு நிர்வாகத்திடம் தெரிவித்தோம் கல்லூரியிலிருந்து மின் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் கல்லூரிக்கு கொடுக்கப்படும் மின் இணைப்பை துண்டித்து உள்ளனர். ஒரு வாரம் விடுமுறையில் இருந்த மாணவ. மாணவிகள் இன்று கல்லூரிக்கு வந்தனர். தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் படிக்க முடியவில்லை எழுத முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு மின் இணைப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சுழற்சி முறையில் நடைபெறும் இந்த கல்லூரி அதாவது காலை, மதியம் என இரண்டு பிரிவுகளாக மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் காலை நேரத்தில் வரும் மாணவ மாணவிகள் மூன்று மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதேபோல் மதியம் வரும் மாணவர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.