ஐ.சி.சி. வெளியிட்ட டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ரிஷப் பந்த், அஸ்வின் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 


ரிஷப் பந்த் முன்னேற்றம்


இந்தியாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3-1 என்று இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. 
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதியதாக வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 7 இடங்கள் முன்னேறி 747 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவும் அதே புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார். 
அதேபோல, அகமதாபாத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வாஷிங்கடன் சுந்தரும் 69வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


கோலிக்கு சறுக்கல்


இந்த தொடரில் சிறப்பாக செயல்படாத கேப்டன் கோலி  814 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார். புஜாரா 697 புள்ளிகளுடன் 13-வது இடத்துக்கு பின்னடைவை சந்தித்துள்ளார். புஜாரா 2016-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் தரவரிசையில் 700 புள்ளிகளுக்கும் கீழ் முதல் முறையாக குறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் 914 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.


அஸ்வின் 2ம் இடம்


பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் 850 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் உள்ளார்.   ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையிலும் அஸ்வின் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து தொடரில் அஸ்வினுடன் இணைந்து தனது சுழற்பந்து வீச்சு மூலம் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்த அக்ஸர் பட்டேல் 552 புள்ளிகளை பெற்று 30வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 4,455 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.