உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2022 தொடரில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியானது.
கொரோனா வைரஸால், ஒலிம்பிக் போன்ற முக்கியமான விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளது.
உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் வீராங்கனைகள் இதில் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் ஆஸ்திரேலியா பறந்த முன்னணி வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் தலைப்புச் செய்தியானார்.
விமான நிலையத்தில் வைத்து அவரை விசாரித்த ஆஸ்திரேலியா பாதுகாப்பு படையினர், அவரிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்தனர். இந்த விவகாரம் உலகெங்கும் வைரலானது. அதனை அடுத்து, விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், தடுப்பூசி செலுத்தி கொள்ள விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பச்சைக்கொடியும் வாங்கிவிட்டார். எனினும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளாதது, மக்களை சந்தித்தது, பயணக் கட்டுப்பாடுகளை பின்பற்றாதது, பாதுகாப்பு நெறிமுகளை மீறியது என ஜோக்கோவிக் மீது அடுக்கடுக்கான குற்றங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்திருக்கும் ஜோக்கோவிக், தான் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த தவறுகளுக்கு தனது டிராவல் ஏஜெண்ட்டை காரணம் காட்டி இருக்கிறார்.
நோவக் ஜோக்கோவிக் இன்ஸ்டாகிராம் பதிவு:
ஜனவரி 17-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றால், அது ஜோக்கோவிக்கின் 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக இருக்கும். டென்னிஸ் வரலாற்றில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற விளையாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை படைக்கக்கூடும். ஆனால், ஜோக்கோவிக்கின் கொரோனா பரிசோதனை தொடர்பான சிக்கல் தொடர்ந்து நீடித்து வருவதால், ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகத்தை கிளப்புகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், உலகம் அறிந்த முன்னணி விளையாட்டு வீரர் அலட்சியமாக இருக்கிறார் எனக்கூறி விளையாட்டு வட்டாரத்தை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்