திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் குப்புசாமி (36). இவர் வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன் (65) அதிமுகவின் 15ஆவது வட்ட நகரதுணை செயலாளராகவும் மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். திருத்தணி நகரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டக கடை எண் 2இல் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.


அதிமுக வட்ட துணை செயலாளராக பதவி வகிக்கும் நந்தன், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோது, புளி  இருந்த பாக்கெட்டில் இறந்து போன பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த புளியில் பல்லி இறந்து கிடந்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு கடை ஊழியர் சரவணனிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் நந்தனுக்கு முறையான பதில் அளிக்காமலும், அலட்சியப் படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருந்த செய்தியாளர்கள் முதியவர் நந்தனிடம் விசாரித்த தகவலின் அடிப்படையில் செய்திகள் ஒளிபரப்பானது.  




இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் பல்லி இல்லை எனவும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதாகவும் முதியவர் நந்தன்  மீது நியாயவிலைக்கடை ஊழியர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தவறான தகவலை பரப்பியதாக பிணையில் வெளிவர இயலாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த தகவலும் செய்தியாக வெளியானது. மனமுடைந்த நந்தனின் மகன் குப்புசாமி (36), நேற்று மாலை உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம்அடைந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து  மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.80 சதவீத தீக்காயம் இருந்ததால் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 



நந்தனை சமாதானப்படுத்தும் உறவினர்கள்


இந்த தீக்குளிப்பு சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். மேலும் குப்புசாமியின் தந்தை நந்தன் மீது பதிவு செய்யப்பட்ட ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கினையும் வாபஸ் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


 





இந்த தீக்குளிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ. அரி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். 


இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்விட் செய்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காவல்துறை நண்பர்களை ஏவல் துறையாக மாற்றி, லஞ்சத்தை பற்றி யார் பேசினாலும் கூட அவருடைய குரல்வளையை அடக்க முயற்சி என விமர்சனம் செய்துள்ளார். 


 








இந்த நிலையில் நியாயவிலைக்கடை ஊழியர் சரவணன் காவல்துறையில் அளித்துள்ள புகார் குறித்தும் நந்தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கு குறித்தும் பேசுவதற்காக திருத்தணி காவல் ஆய்வாளர் ரமேஷை தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இச்சம்பவத்தில் அரசின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெறுவதற்காக மேலும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசரின் தொலைபேசி எண்ணுக்கு முயற்சித்த நிலையில் அவரும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.