நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகில் கூழையுர் என்ற கிராமத்தில் தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்
சேலம் மாவட்டம் கூழையுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). ஏற்கனவே இரண்டுமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தனுஷ், தனது வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்விற்கு இதற்கு முன்பு பல மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நீட் தேர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின் போது மாணவர்கள் தோல்வி அச்சத்தில் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து தெரிவித்துவந்த நிலையில். இன்று மதியம் நடக்கவிருந்த நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த கூழையுரை சேர்ந்த தனுஷ் என்னும் 19 வயது மாணவர் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மறைந்த மாணவன் தனுஷ் பத்தாம் வகுப்பில் 488 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இன்று மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்தார். அவருக்கு மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று தேர்வு எழுத ஹால் டிக்கெட் வந்துள்ளது. நேற்று தனது நண்பர்களிடம் மூன்றாவது முறையும் தேர்ச்சி பெறாவிட்டால் தனது மருத்துவர் கனவு கலைந்து போகும்என்று கூறி வந்துள்ளார்.
நேற்று நள்ளிரவு வரை தனது அறையில் படித்துக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் வேறு அறையில் உறங்கச் சென்றுள்ளார். இன்று அதிகாலை அவரது தாயார் சிவஜோதி எழுந்து பார்த்தபோது மகன் தூக்கிட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் அந்த தேர்வில் பங்கேற்க இருந்த விவசாயி மகன் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.