இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவடைவதால் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 


முடிவுக்கு வரும் பதவிக்காலம்:


விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய அணி. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. இன்னும் சில ரசிகர்கள் இந்திய அணி தோல்வி அடைந்த துயரத்தில் இருந்து வெளிவரவில்லை.  


அதேபோல், இந்த முறை உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணியை வழிநடத்திய ராகுல் டிராவிட்டும், ’இந்த தோல்வியால் என் வீரர்களை உடைந்து நிற்பதை பார்க்க முடியவில்லை’ என்று வேதனை தெரிவித்திருந்தார். இதனிடையே தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று கொண்டவர் ராகுல் டிராவிட்.


அடுத்த பயிற்சியாளர் யார்?


இவர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், இவர் தலைமையில் இந்திய அணி இரண்டு முக்கிய போட்டிகளில் விளையாடியது. அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடர் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்நிலையில், தான் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல், அந்த பொறுப்பிற்கு முன்னாள் இந்திய அணி வீரர் விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


இதனிடையே நேற்று போட்டி முடிந்த பின்னர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ இந்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்கிறோம். நிச்சயம் அனைவரையும் போல் தோல்வியை கடந்து செல்ல வேண்டும். விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும். விளையாட்டில் வெற்றி, தோல்வி இரண்டும் இருக்கும். சில நேரங்களில் விளையாட்டு அதிக மகிழ்ச்சியையும் அளிக்கும், சில நேரங்கள் மோசமாக சோகத்தையும் கொடுக்கும். சோகமடைந்து விளையாடுவதை நிறுத்த கூடாது” என்றார்.


மேலும், “தோல்வியை கண்டால் தான், அதனைவிட பெரிய வெற்றி பெற்று மகிழ்ச்சியடைவோம். அதேபோல் போட்டியை பொறுத்தவரை எப்போது பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றோமோ, அப்போதெல்லாம் விக்கெட்டை பறி கொடுத்தோம்.


விராட் கோலி, ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 40 ரன்களை குறைவாக எடுத்ததாக பார்க்கிறேன். ஒரு வேளை இலக்கு 280 அல்லது 290 ரன்களாக இருந்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும். ” என்று கூறினார். அப்போது அவரிடம் பயிற்சியாளராக தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, “அதை பற்றி நான் தற்போது யோசிக்கவில்லை” என்று தெரிவித்தார் ராகுல் டிராவிட்.


 


மேலும் படிக்க: Virat Kohli: கோப்பை தான் மிஸ்ஸிங்! சாதனை எல்லாம் நம்ம பக்கம் தான்! கிங் கோலியின் மிரட்டலான சாதனை!