தஞ்சாவூர்: அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தியடித்த மகன்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சக்கர நாற்காலியில் 107 வயதாகும் தன் மாமியாரை அழைத்து வந்து மூதாட்டி ஒருவர் கலெக்டரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெம்மேலி, திப்பியக்குடியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மனைவி தனலெட்சுமி (73) கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எனது கணவர் கடந்த 1998-ம் ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு விஜயராணி, சசிகுமார், பூமிநாதன், வீரராஜ், பிரபு,.செந்தாமரை என 2 மகள்கள், 4 மகன்கள் உள்ளனர். நானும் எனது கணவரின் அம்மா பாக்கியம் (107) ஆகியோர் எனது கணவரின் பெயரில் உள்ள சுவிகாரர் தெரு நெம்மேலியில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் எனது மகன்கள் வீரராஜ் மற்றும் பிரபு ஆகியோர் கடந்த 10.03.2023 தேதி காலை என்னையும், எனது மாமியாரையும் முதியோர் என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கி வீட்டிலிருந்து வெளியில் துரத்தி விட்டனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டனர்.

தொடர்ந்து கிராம மக்கள் தலையிட்டு கடந்த 15.03.2023 அன்று மீண்டும் எங்களை வீட்டில் குடியிருக்க வைத்தனர். அதன்பிறகும் எனது இரண்டு மகன்களும் என்னையும் எனது மாமியாரையும் அடிப்பதும், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவாக தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10.11.2023 அன்று மதியம் மீண்டும் எங்களை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.


வீட்டில் இருந்த கட்டில், பீரோ ஆகிவற்றை அடித்து, உடைத்து சேதப்படுத்தி வீட்டைவீட்டு வெளியேற்றிவிட்டனர். தற்போது, வீடு இல்லாமல் தெருவில் இருந்து வருகிறேன். எனது மாமியார் பாக்கியத்திற்கு 107 வயதாகிறது. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் அவரால் நடக்க கூட முடியாது.

எனவே இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு எங்கள் வீட்டில் குடியிருக்க பாதுகாப்பும் மற்றும் பராமரிப்பு தொகையையும் பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் மனுவின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கொள்ளுக்காடு அந்தோணியார்புரம் தெருவை சேர்ந்த மக்கள் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன் தலைமையில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கொள்ளு காடு கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களது குல தொழில் மீன்பிடிப்பதாகும். நாங்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக இதே பகுதியில்தான் வசித்து வருகிறோம் ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இட நெருக்கடி மிகுதியாக உள்ளது. வீடும் உப்பு காற்று வீசி மிகவும் சேதம் அடைந்துள்ளது. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒதுக்கி வீடு கட்டி தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரி காமராஜர் தெருவை சேர்ந்த 50க்கும் அதிகமான பொதுமக்கள் அளித்த மனுவில், ராஜகிரி காமராஜர் தெருவில் வசித்து வரும் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் தினக்கூலிகள். கிடைக்கும் வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம். இதில் 50 குடும்பங்கருக்கு வீடு, இடம் இல்லாமல் ஒரே வீட்டில் 2 முதல் மூன்று குடும்பங்களாக சேர்ந்து வசித்து வருகிறோம். அன்றாட வாழ்வு என்பது மிகவும் மன வேதனையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே இடமற்ற ஏழை விவசாயக் கூலி தொழிலாளர்களான எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.