26-ஆவது மகளிர் சீனியர் கால்பந்து போட்டிகள் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது. இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி ஒடிசா அணியை எதிர்த்து விளையாடியது. 


இந்தப் போட்டியில் இரு அணிகளும் தொடக்கத்தில் சற்று நன்றாக விளையாட தொடங்கினர். குறிப்பாக ஒடிசா அணியின் தடுப்பு ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனால் தமிழக வீராங்கனைகள் பந்தை கடத்தி கொண்டு ஒடிசா கோல் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை கரிஷ்மா ஓரம் கோலாக மாற்றினார். இதனால் ஒடிசா அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின்னர் 37ஆவது நிமிடத்தில் தமிழக வீராங்கனைகள் தடுப்பு ஆட்டத்தில் தவறு செய்தனர். 






அதன்விளைவாக சத்யபத்தி கடியா அடித்த பந்து கோலாக மாறியது. இந்த கோல் மூலம் ஒடிசா அணி 2-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியில் முழுவதும் தமிழ்நாடு கோல் அடிக்க முயற்சி செய்தது பலனளிக்கவில்லை. அதன்பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இரு வீராங்கனைகள் கோல் அடிக்க எடுத்த முயற்சி எதுவும் எடுபடவில்லை. தமிழ்நாடு அணி முதல் பாதியில் செய்த தவறுகளின் காரணமாக 2-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அத்துடன் காலிறுதியில் தோல்வி அடைந்து இந்தத் தொடரிலிருந்தும் வெளியேறியது. 


தமிழ்நாடு அணிக்கு இந்த தொடர் சற்று சிறப்பாகவே அமைந்தது. ஏனென்றால் முதல் முறையாக தமிழ்நாடு சீனியர் அணியில் களமிறங்கிய சந்தியா கோல் மழை பொழிந்தார். மொத்தமாக இந்தத் தொடரில் அவர் 12 கோல்கள் அடித்து அசத்தினார். அத்துடன் தமிழ்நாட்டு வீராங்கனைகள் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒடிசா அணி கடந்த முறை இறுதிப் போட்டி வரை சென்று இருந்தது. கடந்த முறை ஒடிசா அணி இறுதிப் போட்டியில் மணிப்பூர் அணியிடம் 2-1 என தோல்வி அடைந்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு பலம் வாய்ந்த அணியிடம் தான் இம்முறை தமிழ்நாடு அணி தோல்வி அடைந்துள்ளது. 




இன்றைய போட்டியில் செய்த சிறிய தவறுகளை சரி செய்யும் பட்சத்தில் தமிழ்நாடு அணி மீண்டும் சிறப்பாக கலக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏற்கெனவே 2017-18ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி கோப்பையை வென்று இருந்தது. இம்முறை மீண்டும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த போது அது நிறைவேறாமல் போகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் : சியோங்கிடம் தோற்று வெள்ளி பதக்கத்தை வென்றார் சிந்து !