உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் விஸ்வ்நாதன் ஆனந்தைப் பின்னுக்குத் தள்ளி 9 வது இடம் பிடித்து தமிழ்நாடு வீரர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.
செஸ் உலகக்கோப்பை 2023 தொடர் அஸர்பைஜான் நாட்டின் பாகுவில் நடைபெற்று வருகிறது. ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய இத்தொடர் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 செஸ் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இத்தொடரில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேண்டிடேட்ஸ் டோர்னமெண்ட்டில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
இத்தொடரில் கலந்துகொண்டுள்ள தமிழ்நாடு வீரர் குகேஷ் நேற்று அஜர்பைஜான் வீரர் மிஸ்ரடின் இஸ்கண்டரோவை எதிர்கொண்டார். போட்டியின் போது அவரை இரண்டாவது சுற்றில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் உலக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற துருக்கி சூப்பர் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் சிசெவ் க்லெமெண்டியை தோற்கடித்ததன் மூலம் 2750.9 புள்ளிகள் பெற்று உலக தரவரிசைப் பட்டியலில் 11வது இடத்திற்கு முன்னேறினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றியடைந்ததன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக குகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
FIDE வெளியிட்டுள்ள பட்டியலில் 2755.9 புள்ளிகள் பெற்று 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2754 புள்ளிகள் எடுத்துள்ள விஸ்வநாதன் ஆனந்த் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக தரவரிசைப் பட்டியலில் 9 வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், இந்திய தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் குகேஷ். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 18 வது இடத்தில் இருந்த குகேஷ் இந்த ஆண்டு 9 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2838.4 புள்ளிகளுடன் மேக்னஸ் கார்ல்ஸன் முதலிடத்தில் உள்ளார். செப்டம்பர் 1-ம் தேதி அடுத்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதுவரை குகேஷ், விஸ்வ்நாதன் ஆனந்தை விட முன்னணியில் இருப்பார். மேலும் விஸ்வ்நாதன் ஆனந்தை முந்திய முதல் இந்திய வீரரும் குகேஷ் தான்.
உலக அளவிலும், இந்திய அளவிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முன்னணி இடம் பிடித்திருக்கும் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர் குகேஷிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற எயிம்செஸ் ரேபிட் போட்டியில் உலக சாம்பியனாக உள்ள கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்கிற சாதனையை குகேஷ் படைத்திருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:
இதனிடியே, உலக செஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து, நாட்டின் சிறந்த செஸ் வீரராக உருவாகியுள்ள குகேஷின் மகத்தான சாதனைக்கு வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.