ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியின் 3வது போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதியது. இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவிற்காக தனது முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து, இரண்டாவது பெனால்டி கார்னர் மூலம் மீண்டும் ஹர்மன்ப்ரீத் சிங் இரண்டாவது கோலை தள்ள, போட்டி தொடங்கிய 10 நிமிடங்களுக்குள் இந்திய அணி அசத்த தொடங்கியது.
தொடர்ந்து மூன்றாவது சுக்ஜீத்தும், 4வது கோலை ஆகாஷ்தீப் வலையில் தள்ளினர். இதன் தொடர்ச்சியாக சீன வீரர் வென்ஹுய் இந்திய அணி வீரர்களை கடந்து முதல் கோலை பதிவு செய்தார். ஜிஷெங் காவோ சீனாவுக்கான இரண்டாவது கோலை அடிக்க, 37 வினாடிகள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு பெனால்டி கார்னர் கிடைத்து, 6வது கோலை பதிவு செய்தது.
முதல் பாதி முடிவில் இந்திய அணி 6 கோல்களும், சீன அணி 2 கோல்களும் அடித்துள்ளது. இந்தியா சார்பில் வருண் குமார் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா 2 கோல்களையும், ஆகாஷ்தீப் மற்றும் சுக்ஜீத் ஒரு கோல் அடித்தனர்.
தொடர்ந்து 2வது பாதி தொடக்கத்தில் மந்தீப் சிங் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற, இந்திய அணி 7வது கோலுடன் ஆதிக்கம் செலுத்தியது. மந்தீப் சிங்குக்கு 100வது கோல் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சீனா அணி கோல் அடிக்க முடியாமல் திணற, முழு நேர ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7-2 என்ற கணக்கில் வென்றது.