2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த 4 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் உள்ளிட்ட அணிகளில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் சென்னையில் அணியில் எல்.பாலாஜி, மைக் ஹசி, சிஇஒ காசி விஸ்வநாதன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் கொல்கத்தா அணியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 


இந்நிலையில் கொரோனா பாதித்த போது ஏற்பட்ட அனுபவங்கள் தொடர்பாக எல்.பாலாஜி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் கிரிக்இன்போ தளத்திற்கு  பேட்டியளித்துள்ளனர். அதில் பேசிய பாலாஜி, "கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவது  மேன் vs வைல்டு என்ற அனுபவத்தை போன்று இருந்தது. இது உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் கடினமாக ஒரு அனுபவமாக அமைந்தது. மே 2ஆம் தேதி எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது.  முதலில் லேசான மூக்கடப்பு இருந்தது. பின்னர் உடம்பு வலி அதிகமானது. அன்றே நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அத்துடன் என்னை தனிமை படுத்தி கொண்டேன்.




மே 3ஆம் தேதி எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நான் கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றி வந்தேன். அத்துடன் பயோபபுள் முறையையும் சரியாக கடைபிடித்து வந்தேன். அப்படி இருக்கும் போது எனக்கு எப்படி தொற்று உறுதியானது என்று தெரியவில்லை. மேலும் எனக்கு தொற்று உறுதியான போது என்னுடன் இருந்த மற்ற வீரர்கள் குறித்து தான் நான் சிந்தித்தேன். குறிப்பாக ராபின் உத்தப்பா, புஜாரா, ஃபில்டிங் பயிற்சியாளர் ராஜீவ் குமார் என்னுடன் தொடர்பில் இருந்தனர். அவர்களுடைய உடல்நிலை குறித்து எனக்கு அதிக பயம் ஏற்பட்டது.


அதன்பின்னர் ஹசி மற்றும் காசி விஸ்வநாதன் ஆகிய இருவரும் கொரோனா தொற்று உறுதியான செய்தி எனக்கு கிடைத்தது. அப்போது நானும் ஹசியும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டோம். சென்னை வந்தவுடன் எங்கள் இருவருக்கும் சற்று ஆறுதல் கிடைத்தது. பின்னர் நாங்கள் இருவரும் சற்று பேசி கொண்டோம். பின்னர் இறுதியில் குணம் அடைந்தோம்" எனத் தெரிவித்துள்ளார். 




சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, "கொரோனா தொற்று ஏற்பட்ட போது மனதை வெளியே நடக்கு விஷயங்கள் குறித்து சிந்திக்காமல் மாற்றுவது மிகவும் கடினமாக அமைந்தது. நான் ஏற்கெனவே தனியாக இருந்ததால் அது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. எனக்கு காய்ச்சல், சளி என இரண்டும் இல்லை. ஆனால் அதிகளவு உடம்பு வலி மற்றும் உடல் சோர்வு இருந்தது. மேலும் எனக்கு  வாசனை மற்றும் சுவையை அறிய முடியவில்லை. என்னுடைய அனுபவத்திலிருந்து நான் கூறுவது ஒன்று தான். கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து நீங்கள் மீண்டாலும் மேலும் 2 வாரங்கள் நல்ல ஓய்வு எடுங்கள். அத்துடன் எப்போதும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் அது உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் பாதுகாப்பான ஒன்று" எனக் கூறியுள்ளார்.