கோவையில் போதை ஆசாமிகள் போல் நடித்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை கைது செய்த காவல் துறையினர் 1750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் மதுக் குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம் பலர் அதிக விலை கொடுத்து மது வாங்கி குடிக்கவும் தயாராக உள்ளனர். இதனை பயன்படுத்தி மதுபானங்களை சிலர் வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது பரவலாக நடந்து வருகிறது. சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருபவர்களை காவல் துறையினர் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.



கோவை தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு ஆயத் தீர்வை  அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கரூர் மாவட்டம் வேலகவுண்டன்பட்டியை சேர்ந்த முருகேசன் (42) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது.  மேலும் முருகேசன் இரவு நேரங்களில் தனக்கு தெரிந்தவர்களுக்கு குடோனில் வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை கையும், களவுமாக பிடிக்க காவல் துறையினர் முடிவு செய்தனர். பின்னர் போதை ஆசாமிகள் போல நடித்து முருகேசனிடம் சென்று மது வேண்டுமென கேட்டுள்ளனர். அப்போது பணத்தை பெற்றுக் கொண்டு மதுபானத்தை கொடுத்த போது, முருகேசனை மது விலக்கு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.



ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 1750 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முருகேசனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் முருகேசன் தனது குடும்பத்துடன் இடையர்பாளையம் பகுதியில் வசித்து வருவதும், தடாகம் சாலையில் குடோன் வைத்து காலி மது பாட்டில்களை வாங்கி கம்பெனிகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக நகர மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை இலாபம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த முருகேசனை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.