கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


மருத்து நிபுணர் குழுவுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சட்டமன்றக் கட்சி உறுப்பினர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தளர்வுகளை பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவது அதிகரித்துள்ளது. தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கை விடுமுறை காலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. தமிழ்நாட்டிலேயே கூடுதலாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது” என்று பேசினார்.




முன்னதாக, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர் நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.  தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இந்த யோசனையை வழங்கியுள்ளது. மேலும், கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.