ஆசிய தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் குமார் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.


ஆசிய தடகள போட்டி:


தாய்லாந்து தலைநகரான பேங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. இதில் தற்போது வரை ஜப்பான் மற்றும் சீனா முதல் இரண்டு இடங்களை வகிக்க, 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். 


வரலாற்றில் முதல் முறை:


400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் தமிழரசன் பங்கேற்றார். தொடர்ந்து பந்தய தூரத்தை 49:40 வினாடிகளில் கடந்து சந்தோஷ் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் வெண்கல பதக்கத்தை வென்ற சந்தோஷ் குமார் தமிழரசன், ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  முன்னதாக இவர் 49.49 நொடிகளில் ஓடியதே சாதனையாக இருந்தது. பதக்கம் வென்ற மதுரையை சேர்ந்த சந்தோஷ் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த போட்டியில் கத்தார் வீரர் முகமது ஹமீதியா பசீம் தங்க பதக்கத்தையும், ஜப்பானின் யுசாகு கொடோமா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். 






சீமான் வாழ்த்து:


இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ““தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டினைச் சேர்ந்த தடகளவீரர் அன்புமகன் சந்தோஷ்குமார் தமிழரசன், 400மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ள செய்தியறிந்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன். ஆசிய தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மகன் சந்தோஷ்குமார் தமிழரசனுக்கு என்னுடைய பாராட்டுகள்!” என குறிப்பிட்டுள்ளார்.


ஒலிம்பிற்கு தகுதி:


ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற கேரளாவை சேர்ந்த முரளி ஸ்ரீஷங்கர் 8.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.  அவரது வாழ்நாளில் அவர் தாண்டிய இரண்டாவது அதிகப்படியான நிளம் இதுவாகும். முன்னதாக, 8.41 மீட்டர் தூரம் தாண்டியது அவரது தனிநபர் சிறப்பான நீளம் தண்டுதலாக உள்ளது. இதனிடையே, சீன தைபேயின் யு டாங்-லின் 8.40 மீட்டர் தூரம் தாண்டி தங்கத்தை கைப்பற்றினார். அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற, குறைந்தது 8.27 மீட்டர்கள் தாண்ட வேண்டியது கட்டாயம். ஆனால், 8.37 மீட்டர் தூரம் தாண்டியதன் மூலம் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்க முரளி ஸ்ரீஷங்கர் தகுதி பெற்றுள்ளார்.  கடந்த 2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் முரளி ஸ்ரீஷங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.