Virat Kohli 500th International Match: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் விஸ்வரூப ஆட்டக்காரராகத் திகழும் விராட் கோலி சர்வதேச அளவில் 500வது போட்டியில் விளையாடவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தான் அறிமுகமானடு முதல் இன்று வரை, தனது ருத்ரதாண்டவ ஆட்டத்தால் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அவர் வசம் இல்லாத சாதனைகளே இல்லை. இப்படி இருக்கும்போது வரும் 20ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு எதிராக நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி களமிறங்கினால் அது சர்வதேச போட்டியில் அவரது 500வது போட்டியாக இருக்கும். அதாவது ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி என அனைத்தையும் சேர்த்து இதுவரை 499 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
274 ஒருநாள் போட்டிகள்
கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 12 ஆயிரத்து 898 ரன்கள் விளாசியுள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள். இதுவரை ஒருநாள் போட்டியில் 46 சதங்களும் 65 அரைசதங்களும் விளாசியுள்ளார். அதேபோல் கிட்டத்தட்ட 107 ஓவர்கள் பந்து வீசி, 665 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
115 டி20 போட்டிகள்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் 2010ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி களமிறங்கிய விராட் கோலி இதுவரை 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், ஒரு சதம் 37 அரைசதங்கள் உட்பட 4008 ரன்கள் குவித்துள்ளார். டி20 போட்டியில் கிட்டத்தட்ட 25 ஓவர்கள் வீசியுள்ள இவர் 204 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
110 டெஸ்ட் போட்டிகள்
டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி அறிமுகமானார். அன்று முதல் இதுவரை 110 டெஸ்ட்களில் விளையாடியுள்ள விராட்கோலி, 8 ஆயிரத்து 555 ரன்கள் குவித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 254 ரன்கள். இதில் இதுவரை 7 இரட்டைச் சதமும், 28 சதமும், 29 அரைசதமும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டியிலும் பந்து வீசியுள்ள விராட் கோலி, இதுவரை 29 ஓவர்கள் வீசி அதில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இதுவரை விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் தெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் 500 மற்றும் அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடியவர்கள் எண்ணிக்கை 9 வீரர்களின் பெயர் உள்ளது. விராட் கோலி டெஸ்ட் போட்டியில் களமிறங்கினால் இந்த வரிசையில் அவர் 10வது வீரராக இணைவார்.