கோவில்பட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல் முறையாக கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது.
ஹாக்கி பயிற்சி முகாம்:
ஹாக்கி விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் மேம்படுத்தி கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கு 15 நாள்கள் கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்திய ஹாக்கி முன்னாள் பயிற்சியாளரின் கோச்சிங்:
இவர்களுக்கு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் முகமது ரியாஸ், ஹாக்கி பயிற்சியாளர்கள் முத்துக்குமார்,ரோஸி ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியின் முடிவில் கலந்து கொண்டுள்ள வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல் முறையாக கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சி முகாம் குறித்து முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர் முகமது ரியாஸ் கூறுகையில், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஹாக்கியை ஊக்குவிக்கும் வகையிலும், வீரர்கள் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளும் வகையிலும் இந்த பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலமாக அதிக வீரர்கள் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் ஒரிசாவை விட தமிழகத்திலிருந்து அதிக வீரர்கள் இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ளது. இது போன்ற பயிற்சி முகாம்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தின் ஹாக்கி மையமாக கோவில்பட்டி உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.