சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்றுகொடுத்த எம்.எஸ்.தோனி, ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியிருடன் இணைந்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, “தல ரிட்டர்ன்ஸ்” என்று ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டான தோனி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேநேரத்தில், ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 2020 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த ஐபிஎல் போட்டியில் மீண்டு வருவோம் என்று தோனி கூறினார். அதேபோல், இந்த 2021 ஐபிஎல் தொடரை வென்று சொன்னதை செய்து காட்டினார் தோனி.
இதனிடையே, 2021 ஐபிஎல் தொடரில் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தோனியை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. பல போட்டிகளில் வெற்றி கேப்டனாக திகழும் கேப்டன் கோலி, ஐசிசி கோப்பையை மட்டும் வெல்ல தடுமாறி வருகிறார். இதனால், அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது. இம்முறை எப்படியும் டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், கோலிக்கு உத்வேகமாக ஒருவர் இருக்க வேண்டும் எனவும் இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் தொடரை வென்ற கையோடு இந்தியாவுக்கு திரும்பாமல், யுஏஇ-இல் இந்திய அணியுடன் தோனி இணைந்துள்ளார். இதுதொடர்பான இரண்டு புகைப்படங்களை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன், ராஜாவுக்கு அன்பான வரவேற்பு எனப்பதிவிட்டு, புதிய ரோலில் மீண்டும் இந்திய அணியுடன் தோனி என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த படங்கள் இந்திய அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பகிரப்பட்டன, "அவர் எப்போதாவது நம்மை விட்டு சென்றாரா? இல்லை" எனவும் பதிவிடப்பட்டிருந்தது. தோனி இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்