ஐ.பி.எல். தொடர் நாளையுடன் நிறைவடையும் நிலையில், உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது. பிரதான அணிகள் மோதும் சூப்பர் 12 ஆட்டம் வரும் 23-ந் தேதி தொடங்க உள்ளது. இதில் குரூப் 2 அணிகளுக்கான சூப்பர் 12 ஆட்டம் வரும் 24-ந் தேதி தொடங்க உள்ளது.


24-ந் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக, பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. இதுதொடர்பாக, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,


“ ஒவ்வொரு ஆட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், அழுத்தம் குறித்தும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக, இந்தியாவிற்கு எதிராக ஆடும் முதல் போட்டி பற்றி நன்றாக தெரியும். நாங்கள் அந்த போட்டியில் வெற்றி பெற்று முன்னோக்கி செல்வோம் என்று நம்புகிறோம். நாங்கள் கடந்த மூன்று, நான்கு வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நாங்கள் கிரிக்கெட் ஆடி வருகிறோம். இங்குள்ள சூழல் குறித்து நாங்கள் நன்றாகவே அறிவோம்.




விக்கெட்டுகளுக்கு இடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்றும் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக தெரியும். அந்த நாளில் யார் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். என்னை கேட்டால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.


ஒரு அணியாக எங்களது நம்பிக்கையும், மன உறுதியும் மிகவும் அதிகளவில் உள்ளது. நாங்கள் கடந்த காலத்தை பற்றி நினைக்கவில்லை. எதிர்காலத்தை பற்றிதான் யோசிக்கிறோம். அதற்காக நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறாம். நான் முழு நம்பிக்கையுடன் உள்ளேன். நாங்கள் நன்றாக தயாராகி, அந்த நாளில் நன்றாக கிரிக்கெட் ஆடுவோம். “ இவ்வாறு அவர் கூறினார்.




கடந்த 2019ம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை போட்டிக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் விளையாடும் ஆட்டம் இதுவென்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாபர் ஆசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி இதுவரை 28 டி20 ஆட்டங்களில் ஆடியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக ஆடி வருகின்றனர். துபாய் மைதானத்தில் 2016ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் தோற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இதுவரை வெற்றி பெற்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் ஆசாம் இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 362 ரன்களும், 83 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 985 ரன்களும், 61 டி20 போட்டிகளில் 2 ஆயிரத்து 204 ரன்களும் குவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண