சர்வதேச கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான டி20 உலகக் கோப்பை தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் சுற்றில் 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. முதல் சுற்றிலிருந்து 4 அணிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்தச் சுற்று போட்டிகள் மிகவும் விறு விறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய உள்ளிட்ட அணிகளுக்கு நாளை முதல் பயிற்சி போட்டிகள் தொடங்க உள்ளன. இதனால் ஐபிஎல் முடிந்தது என்று கவலைப்படும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த சில நாட்கள் மீண்டும் கிரிக்கெட் திருவிழா விருந்தளிக்க காத்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று உள்ள அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஸ்வத் ரஞ்சன் சாஹூ என்ற இளைஞர் டி20 உலகக் கோப்பை வடிவத்தை தீக்குச்சிகளால் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் 2850 தீக்குச்சிகளை பயன்படுத்தி 21 இன்ச் நீளமும், 8 இன்ச் அகலமும் கொண்ட டி20 உலகக் கோப்பை மாதிரியை செய்துள்ளார். இந்த வடிவம் தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அந்தப் பதிவை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பார்த்து ரசித்து அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணி நாளை நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு பிறகு வரும் 20ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் வரும் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்க உள்ளது.
மேலும் படிக்க: சைவ உணவில்லை.. உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு பீர் - கும்ப்ளே செய்தது என்ன?