இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது அனில் கும்ப்ளே தான். இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 271 ஒருநாள் போட்டியில் விளையாடி 337 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவை தவிர பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டையும் வீழ்த்தி ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அனில் கும்ப்ளே இன்று தன்னுடைய 51ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் 1995ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற போது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவத்தை சற்று திரும்பி பார்ப்போம். 1995ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் அனில் கும்ப்ளே நார்தாம்டன்ஷர் அணிக்காக விளையாடினார். அந்த கவுண்டி சீசன் முழுவதும் சிறப்பாக பந்துவீசிய அனில் கும்ப்ளே 105 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அந்த கவுண்டி சீசனில் முதலிடம் பிடித்த வார்விக்ஷர் அணிக்கு எதிராக நார்தாம்டன்ஷர் அணி விளையாடியது. அந்தப் போட்டியில் அனில் கும்ப்ளேவிற்கு நடந்த சம்பவம் தொடர்பாக நார்தாம்டன்ஷர் அணியில் விளையாடிய டேவிட் காபல் தன்னுடைய 'ஃபிளையிங் ஸ்டெம்ப்ஸ் அண்டு மெடல் பேட்' என்ற புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நார்தாம்டன்ஷர் வெறும் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத் தொடர்ந்து ஆடிய வார்விக்ஷர் காபலின் சிறப்பான பந்துவீச்சால் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய நார்தாம்டன்ஷர் அணி 346 ரன்கள் எடுத்தது. அதில் அனில் கும்ப்ளே பேட்டிங்கில் 21 ரன்கள் விளாசினார். வார்விக்ஷர் அணியில் ஆலென் டோனால்ட்,டெர்மெட் ரீவ் உள்ளிட்ட முன்னணி பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருந்தனர். அந்தப் பந்துவீச்சை அனில் கும்ப்ளே சாமாளித்து ஆடினார். கடைசி நாளில் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வார்விக்ஷர் அணி பேட்டிங் செய்தது. அப்போது சிறப்பாக பந்துவீசிய அனில் கும்ப்ளே மல மல வென 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் உணவு இடைவேளையின் போது அந்த அணி 53 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தவித்தது.
கடைசி நாள் உணவு இடைவேளையின் போது கும்ப்ளேவிற்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது அந்தப் போட்டியில் பங்கேற்ற மொத்த வீரர்களில் அனில் கும்ப்ளே மட்டும் சைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டவர். இதனால் ஒரே ஒரு சைவ உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அதை கும்ப்ளே வந்து எடுப்பதற்குள் எதிரணியின் டெர்மேட் எடுத்து சாப்பிட்டுவிட்டார். இதன்காரணமாக அனில் கும்ப்ளேவிற்கு மதிய உணவு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது அனில் கும்ப்ளே டேவிட் காபலிடம், "இப்போது எனக்கு உணவு இல்லை என்றால் என்ன. நான் உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு பீர் சாப்பிடுகிறேன்" எனக் கூறியுள்ளார். அதாவது வார்விக்ஷர் அணியின் பட்ட பெயர் பீர். அந்த அணியின் இரண்டு விக்கெட்டை உணவு இடைவேளைக்கு பின்பு எடுக்கிறேன் என்பதை சூசகமாக கூறியுள்ளார்.
உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய போது அனில் கும்ப்ளே வார்விக்ஷர் அணியின் டெர்மெட் ரீவ் மற்றும் கெய்த் பிபர் ஆகிய இருவரையும் அவுட் ஆக்கினார். அத்துடன் அந்தப் போட்டியில் 7 விக்கெட் எடுத்து நார்தாம்டன்ஷர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். உணவு இடைவேளையின் போது சொன்னதை களத்தில் அப்படியே கும்ப்ளே நிறைவேற்றி காட்டி அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தார். கும்ப்ளே எப்போதும் களத்தில் தன்னுடைய போராடும் குணத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர். இதேபோன்று தான் ஒரு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் முகத்தில் அடிப்பட்டு இருந்தப் போது ஒரு கட்டு போட்டு கொண்டு பந்துவீசி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
மேலும் படிக்க:இந்திய ஜெர்ஸியை போட்டவுடன் என் மகள் கேட்ட கேள்வி - அஸ்வினின் நெகிழ்ச்சியான இன்ஸ்டா பதிவு !