தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால், செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகின் நாயகனாக அறிமுகமான இவர் நடித்த சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்.
இந்த நிலையில், விஷால் நடிக்கும் 32வது படத்தின் தலைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று ஏற்கனவே நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதன்படி, சற்றுமுன் விஷால் நடிக்கும் 32வது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஏ.வினோத் குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு லத்தி சார்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. லத்தி சார்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ளதால் இந்த படம் காவல்துறை தொடர்பான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் காவல்துறை அதிகாரியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் ஏற்கனவே சத்யம், அயோக்யா ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ரமணா மற்றும் நந்தா இருவரும் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் முழுபடப்பிடிப்பும் நிறைவு பெற உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்க உள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் நந்தா, பிரபு உள்ளிட்ட பல நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
நடிகர் விஷால் நடிப்பில் ஏற்கனவே எனிமி படம் உருவாகி வெளியிட்டீற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் அவரது 31வது படமாக வீரமே வாகை சூடும் படப்பிடிப்பு தயாராகி வருகிறது. து.பா. சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, துப்பறிவாளன் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து விஷால் படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்