வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில், நடந்து முடிந்துள்ள 3 டி-20 போட்டிகளையும் வென்றுள்ள வங்கதேச அணி, தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேச அணி பெறும் முதல் சீரீஸ் வெற்றி ஆகும்.
நேற்று நடைபெற்ற மூன்றாவது டி-20 போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. வங்கதேச அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் மஹமுதில்லா மட்டும் ஒன் மேன் ஆர்மியாக களத்தில் நின்று அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆஸ்திரேலியாவின் எல்லீஸ் 3 விக்கெட்டுகளும், ஜம்பா மற்றும் ஹேசல்வுட்டிற்கு தலா 2 விக்கெட்டுகளும் கிடைக்க, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்தது.
குறைவான ஸ்கோர் என்பதால், ஆஸ்திரேலியா சேஸ் செய்து தொடரை இழப்பதில் இருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லோ ஸ்கோர் இலக்கை சேஸ் செய்ய முடியாத ஆஸ்திரேலிய அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் பென் 35 ரன்களும், மார்ஷ் அரை சதமும் கடந்து ரன் சேர்த்தனர். ஆனால், 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
வங்கதேச அணி வீரர்கள், ஆஸ்திரேலியா அணியை ரன் எடுக்க விடாமல் தடுத்தனர். இந்த போட்டியில், ஒரு விக்கெட்டும் எடுக்காத வங்கதேச அணி வீரர் முஸ்தாஃபிசுர் ரகுமான், அவர் வீசிய 4 ஓவர்களில், 15 டாட் பால்கள் வீசி வெறும் 9 ரன்கள் கொடுத்துள்ளார். கடைசி 12 பந்துகள் இருக்கையில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, 19வது ஓவர் வீசிய முஸ்தாஃபிசுர் ரகுமான், வெறும் 1 ரன் கொடுத்து கடைசி ஓவர் பிரஷரை ஆஸ்திரேலியா அணிக்கு தள்ளினார்.
கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டபோது, ஆஸ்திரேலியாவுக்கு இதெல்லாம் அசால்ட்டு, மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் களத்தில் உள்ளனர் என நினைத்து கொண்டிருந்தால், நடந்தது வேறு. ‘காலம் மாறி போச்சு’ என்ற கதையாக லோ ஸ்கோரிங் இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய அணி தத்தளித்து வருகின்றது. இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 டி-20 தொடர்களையும் ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது.
ஆஸ்திரேலியா vs | இங்கிலாந்து | 1-2 |
ஆஸ்திரேலியா vs | இந்தியா | 1-2 |
ஆஸ்திரேலியா vs | நியூசிலாந்து | 2-3 |
ஆஸ்திரேலியா vs | வெஸ்ட் இண்டீஸ் | 1-4 |
ஆஸ்திரேலியா vs | வங்கதேசம் | 0-3* |
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை தொடர் இப்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் டி-20 ஃபார்ம் மோசமாக உள்ளது. டி-20 உலகக்கோப்பை தொடங்குவதற்குள் ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டியது அவசியம்!