இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அந்த நாட்டின் நாட்டிங்காமில் உள்ள ட்ரென்ட் ப்ரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை நேற்று தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் நல்ல தொடக்கத்தை அளித்தனர்.


அணியின் ஸ்கோர் 97 ஆக இருந்தபோது ரோகித்சர்மா வெளியேறினார். இதையடுத்து, புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது நாளான இன்று தொடக்கத்திலே ரிஷப் பண்டின் விக்கெட்டை இந்திய அணி இழந்தாலும், அணியை சரிவில் இருந்த கே.எல்.ராகுலும், ரவீந்திர ஜடேஜாவும் மீட்டனர். இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டிற்கு 60 ரன்களை குவித்தனர். கே.எல்.ராகுல் தனி ஆளாக போராடி 84 ரன்களை சேர்த்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.




இதையடுத்து, இந்திய அணியின் டெயிலண்டர்கள் தங்களது அதிரடியான ஆட்டம் மூலம் இந்திய அணி ஓரளவு நல்ல முன்னிலை பெற உதவியுள்ளனர். ரவீந்திர ஜடேஜா தனது அதிரடியான ஆட்டம் மூலம் மைதானத்தில் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் பறக்கவிட்டு 56 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா 34 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணி இங்கிலாந்தை விட 95 ரன்கள் முன்னிலை பெற்றது.


இங்கிலாந்து அணியில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்து வரும் ராபின்சன் 26.5 ஓவர்கள் பந்துவீசி 85 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிவரும் இங்கிலாந்து அணி சற்றுமுன் வரை 11.1 ஓவர்களில் 25 ரன்களை எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்களுடனும், டொமினிக் சிப்ளி 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.




இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கே.எல்.ராகுலை ஆட்டமிழக்க செய்தபோது புதிய உலக சாதனையை படைத்தார்.  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 619 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி 621 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 800 விக்கெட்டுகளுடன் இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் வார்னேவும் உள்ளனர்.