நயன்தாரா... அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை ரசிகர்களின் நெஞ்சில் நிரந்தர குத்தகைதாரராக குடியேறியிருப்பவர். பொதுவாக நடிகைகள் அறிமுகம் ஆன பின் சில நாட்களில் திடீரென மறைந்து விடுவார்கள். அல்லது மறக்கப்படுவார்கள். ஆனால் நயன்தாராவிற்கு மட்டும் அதிவிலக்கு. அறிமுகமான பிறகு, சில ஆண்டுகள் கழித்து தான் அவர் பிரபலமாக தொடங்கினார். 


பில்லாவில் அவர் டாட்டூ குத்தி பிகினியில் நடந்து வந்த போது, ஒட்டுமொத்த விழுந்த இளைஞர் பட்டாளம், அதன் பின் எழவே இல்லை. அடுத்தடுத்து சர்சைகள் நயன்தாராவை சூழ்ந்த போதும் கூட, அவரை கொண்டாடுவதை யாரும் நிறுத்த தயாராகவில்லை. ஒரு கட்டத்தில் ‛லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற பட்டத்துடன் கோலோச்சாத் துவங்கினார் நயன்தாரா. தமிழ் சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகையும் இத்தனை ஆண்டுகள் கொண்டாடப்படவில்லை. கொண்டாடப்படப்போவதும் இல்லை. அதற்கான முழு உரிமத்தையும் நயன்தாரா தன்வசமாக்கிவிட்டார்.


ஹீரோக்களை புக் செய்வதைப் போல, நயன்தாராவை மட்டுமே நம்பி படங்கள் வெளிவரத்துவங்கிவிட்டன. நயன்தாரா ‛ஒன் விமன் ஆர்மி’யாக தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டிருக்க, அவருக்கு அனைத்து தரப்பு வயதினரிடையே ரசிகர்கள் குவிந்து வருகிறார். அந்த வரிசையில் பிரபல அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், நயன்தாரா குறித்து கவிதை ஒன்றை கூறியுள்ளார். தனியாளர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியின் போது நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சிலாகித்த அவர், நயன்தாராவை நயாகராவுன் ஒப்பிட்டு ஒரு கவிதை கூறினார். முன்னதாக நயன்தாரா பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு நாஞ்சில் சம்பத் கூறி பதில் இதோ...


‛‛நயன்தாரா... தமிழ்நாட்டின் திரை வரலாற்றில் அதிசயம் செய்தவர்! பொதுவாக நடிகைககள் 2 படங்களில் ஜொலிப்பார்கள். பின்னர் தூக்கி வீசப்படுவார்கள். யாராலும் தூக்கி வீசமுடியாத அளவிற்கு 13 ஆண்டுகள் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திய அதிசயத்திற்கு பெயர் நயன்தாரா,’’ என நயன்தாராவிற்கு நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டினார். 


அதைத் தொடர்ந்து நயன்தாராவிற்கு ஒரு கவிதை சொல்லுங்கள் என நெறியாளர் கேட்க, அடுத்த நொடியே சிலாகித்து ஒரு கவிதை சொன்னார் நாஞ்சில் சம்பத். இதோ அது....


‛நயன்தாரா...


அவள் நயாகரா..


அதில் நனைய பலர் விரும்புகிறார்கள்... 


ஆனால் நயாகராவில் நனைய அனுமதியில்லை!


நயன்தாரா... எதையும் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு எனக்கு வசதியில்லை!


ஆனால் நயன்தாராவுக்கு கொடுக்க உலகத்தை வாங்கலாமா என ஆசைப்படுகிறேன்!’’


என, நயன்தாரா பற்றி நாஞ்சில் சம்பத் உருகி உருகி கூறிய கவிதை தான், தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. நயன்தாராவின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தில் நாஞ்சில் சம்பத் போன்ற பிரபலங்களும் அடங்கியிருக்கிறார்கள் என்பது அவரது கவிதை மூலம் தெரியவந்துள்ளது.