இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் ஆட்டக்காரரான பிவி சிந்து சயித் மோடி சர்வதேச பாட்மிண்டன் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். முன்னாள் உலக பாட்மிண்டன் சாம்பியனான சிந்து தனது சக ஆட்டக்காரரான மாளவிகா பன்சோடை 21-13, 21-16 என்கிற செட் கணக்கில் தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றுள்ளார். இது அவர் வென்றுள்ள இரண்டாவது சர்வதேச ஒற்றையர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


 










 


முன்னதாக, டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த், லக்‌ஷ்யா சென், பிரனாய் ஆகிய நான்கு பேரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான தாய் சு யிங்கை எதிர்த்து காலிறுதியில் விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமில் தாய் சு யிங் அதிரடியாக தொடங்கினார். வேகமாக 11 புள்ளிகளை தாய் சு யிங் எடுத்தார்.


அதன்பின்னர் பி.வி.சிந்து வேகமாக புள்ளிகளை சேர்க்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் 14-10 என்ற கணக்கில் சிந்து தாய் சு வின் முன்னிலையை குறைத்தார். எனினும் தாய் சு யிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-17 என்ற கணக்கில் முதல் கேமை வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமில் இரண்டு வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக தொடங்கினர். ஒரு கட்டத்தில் இரண்டு வீராங்கனைகளும் 8-7 என்ற கணக்கில் சமமாக இருந்தனர். அதன்பின்னர் தாய் சு யிங் புள்ளிகளை அடுத்தடுத்து எடுக்க தொடங்கினார். இறுதியில் இரண்டாவது கேமையும் தாய் சு யிங் 21-13 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் பி.வி.சிந்து இந்த தொடரிலிருந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.